Monday, June 15, 2015

முறைகேடு புகார் எதிரொலி: மே 3-ல் நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், 4 வாரங்களுக்குள் மறு தேர்வை நடத்துமாறும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியாக இருந்தது.

இதனிடையே ஹரியாணாவில் வினாத்தாள் கசிவு காரணமாக இத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த முறைகேட்டில் எவ்வளவு பேர் பயனடைந்தார்கள் என அறிக்கை அளிக்கும்படி ஹரியாணா போலீஸாருக்கு உத்தரவிட்டது.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதாபா "“சட்ட விரோதமாக ஒரேயொரு மாணவர் பயனடைந்தாலும் அவர் தேர்வின் தரத்தை சீரழிக்கும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவ நுழைவுத் தேர்வின் புனிதத்தை நாங்கள் தியாகம் செய்ய முடியாது.

இதைக் காக்க நீங்கள் தவறிவிட்டீர்கள். தேர்வு நடைமுறைகள் மிகவும் பழமையானவை. கடந்த 2 3 ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எனவே முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் சிபிஎஸ்இ உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டனர்.

"இத் தேர்வை மீண்டும் நடத்துவதா என்பது குறித்து வரும் 15-ம் தேதி நீதிமன்றம் முடிவு செய்யும். அதுவரை நுழைவுத் தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிடக்கூடாது" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று (15-ம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், "சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது.

சிபிஎஸ்இ மறு தேர்வை 4 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது" எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024