Saturday, June 6, 2015

தொழில் ரகசியம்: தவறை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு



சுடச்சுட நாம் சாப்பிட்ட உடனடி உணவு இன்று சூடான விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. ‘மேகி’யில் அளவிற்கு அதிகமாக மோனோசோடியம் குளூடமேட் மற்றும் லெட் (காரீயம்) இருப்பதாக உத்திரப் பிரதேச ‘எஃப்டிஏ’ பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நாடெங்கும் சூறாவளியாக உருவெடுத்து கடைகளில் கரையேறி மக்கள் மனங்களில் மேகி பற்றிய பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.

பல மாநிலங்கள் மேகி விற்பனைக்குத் தடை விதித்திருக்கிறது. பல கடைகள் மேகியை போகி பண்டிகைக்கு குப்பையில் போட்டு எரிப்பதைப் போல் தூக்கி எறிந்துவிட்டன. இச்செய்தி காலை டிபன் மாதிரி தினமும் மீடியாவில் பரிமாறப்படுகிறது. ‘டூ மினிட்ஸ்’ என்று கூறிய பிராண்டிற்கு ‘டூ மினிட்ஸ்’ அஞ்சலி செலுத்தவேண்டிய நிலை வராமலிருக்கட்டும்!

ஏதோ இந்த மட்டும் மேகியாக இருப்பதால் ஓரளவேனும் தாக்குப் பிடிக்க முடிகிறது. மேகிக்கு ஏற்பட்ட நிலை சாதாரண பிராண்டிற்கு ஏற்பட்டால் கதை கந்தலாகி, பெயர் பொத்தலாகி, கந்தர்வகோலமடைந்து டங்குவார் கிழிந்திருக்கும். இது போன்ற நெருக்கடியில் பிராண்ட் என்ன செய்வது? பிராண்ட் சிக்கலை எப்படி சமாளிப்பது? எப்படி மீள்வது? நெருக்கடியில் சிக்கி மாண்ட, மீண்ட பிராண்டுகளிடமிருந்து பாடம் பயில்வோம் வாருங்கள். ஆறு ‘A’க்கள் கொண்ட பாடம். ஜஸ்ட் டூ மினிட்ஸ் தான்!

அலர்ட்டாக இருங்கள் (Alert)

வருமுன் காப்பது மட்டுமல்ல, உஷாராய் இருப்பதும் விவேகம். நெருக்கடி தாக்கும் முன்பு அதை சமாளிக்கும் செயல்களை துவங்கவேண்டும். நெருக்கடி சுழற்றியடிக்கும் போது என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிவிடும்.

அதனால் நெருக்கடி எந்த ரூபத்தில் எல்லாம் வரலாம் என்று சிந்தித்து அச்சமயத்தில் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது போன்ற திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். சிக்கல்களை திறம்பட சமாளிக்கும் (கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்) நிர்வாகக் குழு உருவாக்கப்படவேண்டும். ஒவ்வொருவரும் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்காமல் யார், எப்படி, என்ன பேசுவது என்பது முன்னமேயே தீர்மானிக்கப்படவேண்டும்

ஆராயுங்கள் (Analyze)

நம்மை விட நம் பிராண்டைப் பற்றி யாருக்கு தெரியும். அதை சதாசர்வ காலமும் கண்காணிப்பது முக்கியம். மார்க்கெட்டில் என்ன பேச்சு அடிபடுகிறது, மக்கள் மனதில் நம் பிராண்ட் எவ்வாறு இருக்கிறது, மீடியா நம் பிராண்டைப் பற்றி என்ன நினைக்கிறது போன்ற விஷயங்களை 24x7 கண்காணிக்கவேண்டும். ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ போன்றவற்றில் நம் பிராண்டைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று ஆராய அலுவலகத்தில் ஒரு தனியாக ஒருவரை நியமித்தாலும் தப்பில்லை.

பிரச்சினை பிராண்டின் ஆதார பொசிஷனிங்கையே அசைக்கும் போதுதான் பிராண்ட் ஆட்டம் காணத் துவங்குகிறது. சில மாதங்கள் முன் ‘மெக்டானல்ட்ஸ்’சிலிருந்து ஒரு தெருச் சிறுவன் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது. ஆனால் அது சில நாட்களிலேயே மறைந்தும் விட்டது. காரணம், மெக்டானல்ட்ஸ் என்பது சாப்பிடும் இடம். அதன் ஆதார பொசிஷனிங் வேகமான, சுவையான சாப்பாடு. அந்த அடிவயிற்றில் கை வைக்காத நெருக்கடி பிராண்டை ஆட்டம் காண வைக்காது.

ஒப்புக்கொள்ளுங்கள் (Acknowledge)

நெருக்கடியில் இருக்கும் பிராண்டுகள் செய்யும் பெரிய தவறு தன் தவறை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது. தவறு இருப்பின் முதல் காரியமாய் ஒப்புக்கொள்ளுங்கள். இல்லை என்று சமாளிக்காதீர்கள். நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ‘குறைக்கான காரணங்களை ஆராய்கிறோம், நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று உறுதிபட கூறுங்கள். நீங்களே கூறும்போது செய்தி உங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும். இல்லையென்றால் வருவோர் போவோ ரெல்லாம் செய்திக்கு கண் மூக்கு வைத்து சின்ன நெருக்கடி வளர்ந்து பிராண்டையே சின்னாபின்னமாக்கிவிடும்.

‘ஏர் ஏசியா’ விமானம் நடுவானில் காணாமல் போன போது கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியே (சிஇஓ) அதை உலகிற்கு தன் ட்விட்டர் மெசேஜ் மூலம் தெரியப்படுத்தி உடனுக்குடன் விஷயங்களை மீடியாவிற்கு தந்து வந்தார். இதனால் பிராண்டிற்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

தெளிவாக பதிலளியுங்கள் (Answer)

நெருக்கடி ஏற்பட்டால் ஆயிரம் சோதனை வரும். ஆளுக்கொரு கேள்வி கேட்பார்கள். பொறுமையாக பதிலளிக்கவேண்டும். எழும் ஒவ்வொரு கேள்விக்கில்லை என்றாலும் முடிந்தவரை பதிலளிக்கவேண்டும். அப்பொழுது தான் கம்பெனி உண்மையிலேயே கவலைப்படுகிறது, தேவையான செயல்களை செய்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.

நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது நாமே நம் பிராண்டைப் பற்றி நல்ல விஷயங்கள் பேசுவதை விட மற்றவர்களை விட்டு நம் பிராண்டைப் பற்றி கூற வைப்பது பலன் தரும். கோவாவில் டிரையல் ரூமில் கேமிரா வைக்கப்பட்டது என்று மத்திய அமைச்சரே குற்றம் சாட்டி பெரும் பரபரப்பிற்குண்டான ‘ஃபேப்மார்ட்’டிற்கு ஆதரவாக அந்த மாநில முதல் அமைச்சரே சர்டிஃபிகேட் கொடுத்தது அந்த பிராண்டிற்கு பெரிய உதவியாய் அமைந்தது.

வேகமாய் செயல்படுங்கள் (Alacrity)

கொசுக்கடி என்றால் பட்டென்று கடித்த இடத்தை அடிக்கிறோம். நெருக்கடி என்றால் நம் பதில் நடவடிக்கைகளில் போர்கால வேகம் தேவை. ஆடி அசைந்து ஆற அமர அசமஞ்சமாய் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுறுசுறுப்போடு செயல்படவேண்டும். ‘தாஜ் மஹால்’ ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கிய போது தாஜ் நிறுவனம் உடனுக்குடன் ஹோட்டலிலிருந்த விருந்தாளிகளை காப்பாற்றி வெளியேற்றியது. அதோடு தாக்குதல் நடைபெற்ற எழுபது மணி நேரமும் தங்கள் வெப்சைட்டில் உடனுக்குடன் நிலவரத்தை அப்டேட் செய்துகொண்டே இருந்தது. அதனாலேயே அந்த இமாலய நெருக்கடியிலிருந்து தாஜ் மஹால் ஹோட்டல் மீண்டு இன்று புதுப்பொலிவுடன் பட்டொளி வீசி பட்டையை கிளப்ப முடிகிறது!

ெநருக்கடிக்குப் பின்னும் செயல்படுங்கள் (Aftermath)

நெருக்கடிப் புயல் ஓய்ந்து செய்தி மழை விட்டுவிட்டது என்பதற்காக குடையை மடக்கி வைத்து விட்டு காது குடைய உட்காராதீர்கள். நெருக்கடியால் பிராண்டிற்கு ஏற்பட்ட இழப்பு எத்தகையது என்று ஆராயுங்கள். விற்பனை குறைந்ததா என்று மட்டும் பார்க்காமல் பிராண்டின் நற்பெயருக்கு எத்தகைய குந்தகம் விளைந்திருக்கிறது என்று வாடிக்கையாளரிடம் ஆய்வு செய்யுங்கள்.

செய்தி சேகரிப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி நெருக்கடி எதனால் ஏற்பட்டது, எவ்வாறு வளர்ந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்வது போன்ற விஷயங்களை சேகரியுங்கள். இக்குழுவில் கம்பெனி ஆட்களை மட்டும் சேர்க்காமல் தேர்ந்த நிபுணர்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வது மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களையும் உங்கள் பிராண்டையும் மன்னிக்கக்கூட மக்கள் தயாராய் இருப்பார்கள்.

கெட்ட செய்தியைச் சொல்வதா என்று மீடியாவும் அமங்கல செய்தியை படிப்பதா என்று மக்களும் வருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று கெட்ட நியூஸ் கிடைக்காதா என்று இருவருமே காத்திருக்கின்றனர். நாம் தான் உஷாராய் இருக்கவேண்டும். பிராண்ட் ரெண்டுபட்டால் ஊர் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். கொஞ்சம் அசந்தால் பிராண்டை மென்று தீர்த்து விடுவார்கள். ஊர்காரர் போதைக்கு ஊறுகாய் ஆகாமல் பார்த்து கொள்வது அவசியம்!

நெருக்கடி ஒவ்வொரு தெருக்கோடியிலும் காத்திருக்கிறது. போட்டி பெருக்கெடுத்து ஓடும், மீடியா நெருக்கித் தள்ளும் இன்றைய மார்க்கெட்டிங் உலகில் அசால்ட்டாய் இருந்தால் அல்பாயுசு. ஆறு ‘A’ கொண்டு உஷாராய் இருப்பதே ஆயுள் காப்பீடு!

satheeshkrishnamurthy@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024