Sunday, June 7, 2015

கருணை வேலை பெற்ற அதிகாரிக்கு பணிமூப்பு தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட மறுப்பு



சென்னை:'கருணை வேலை பெற்றவர்களை நேரடித் தேர்வு பெற்றவர்களுக்கு முன் இடம் பெறச் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் பணிமூப்பு பட்டியலை தயாரிக்கும்படி உத்தரவிட்டது சரியே' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-2 பணிக்கு சிவகுமரன் என்பவர் 1992ல் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அவருக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத விலக்கு அளித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின் மோட்டார் வாகன ஆய்வாளராக வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரடி நியமனம் பெற்றனர். இவர்கள் 1998ல் கிரேடு-1 அதிகாரியாக பதவிஉயர்வு பெற்றனர். ஆனால் சிவகுமரனுக்கு 1999ல் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.பணி வரன்முறை செய்யும் போது பட்டியலில் சிவகுமரனுக்கு முன் வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி இருந்தனர். கடந்த 2006ல் மண்டல போக்குவரத்து அதிகாரி பதவி உயர்வுக்கு 15 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இவர்களில் வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தியின் பெயர்களும் இடம்பெற்றன.கடந்த 2010ல் மண்டல போக்குவரத்து அதிகாரியாக சிவகுமரன் பதவி உயர்வு பெற்றார். பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படாததால் தனக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு பாதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகுமரன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேரடி நியமனம் பெற்ற இருவருக்கு முன் சிவகுமரன் பெயரை இடம்பெறச் செய்து பணிமூப்பு பட்டியலை தயாரிக்கும்படி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரன் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் 'அப்பீல்' மனுவை தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தனபாலன் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:முன் தேதியிட்டு சிவகுமரனுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது. கால தாமதமாக வழங்கப்பட்டதற்கு சிவகுமரன் காரணம் அல்ல. உரிய விதிமுறைகள் அரசாணையின் படி தான் சிவகுமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற சிவகுமரனை நேரடி நியமனம் பெற்ற இருவருக்கு முன் இடம்பெறச் செய்து பணிமூப்பு பட்டியலை தயாரிக்கும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. அந்த உத்தரவு செல்லும்.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024