Saturday, October 1, 2016

காலனால் வெல்ல முடியாத ஆளுமை: சிவாஜி கணேசன் 88

நா.முத்துவீராச்சாமி - கா. சுந்தராஜன்

அக்டோபர் :1- சிவாஜி கணேசன் 88



சின்னையா - ராஜாமணி தம்பதிக்கு 1928-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளில் பிறந்த குழந்தைதான் கணேசன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தந்தை சிறை சென்றிருந்தால் பிறக்கும்போதே தந்தையின் முகம் காணவில்லை. தந்தை விடுதலையானபோது அவரது வேலை பறிக்கப்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடியேறினர்.

படிப்பின் மீது ஆர்வமில்லாத கணேச மூர்த்திக்குத் தெருக்களில் நடந்த கூத்துக்கள், நாடகங்கள் மீது ஆர்வம் அதிகம். நண்பர் காக்கா ராதாகிருஷ்ணன் மூலம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். கணேசனின் கலைப் பயணத்துக்கு அங்கு வித்திடப்பட்டது. பல முக்கியமான வேடங்களில், பெண் வேடம் உட்பட அனைத்து வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

பெரியாரின் பாராட்டு

அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தில் திடீர் என்று ஏற்பட்ட மாறுதலால் முதல் நாள் அளிக்கப்பட்ட 90 பக்க வசனங்களை ஒரே இரவில் படித்து நாடகத்தில் சிவாஜியாகவே மாறினார் கணேசன்.

திரைப்படம், நாடகம் ஆகியவற்றைப் பெரிதும் விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா., அண்ணாவின் நாடகத்துக்குத் தலைமை தாங்கினார். கணேசனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அவரை வெகுவாக ஈர்க்க, நாடகத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார். முடிவில் கணேசனைப் பாராட்டிய அவர், ‘நீ சிவாஜியாகவே மாறிவிட்டாய் இன்று முதல் உன் பெயருடன் சிவாஜியும் சேர்ந்து சிவாஜி கணேசன் ஆகிறாய்’ என்று மனதாரப் பாராட்டினார்.

விமான டிக்கெட்டுடன் வந்த வாய்ப்பு

பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ என்ற நாடகத்தில் சிவாஜி கணேசன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவந்தார். அந்நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனர் பி .ஏ. பெருமாள் முதலியாரும் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து இந்நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். இப்படத்தின் கதாநாயகன் குணசேகரனாக கே. ஆர். ராமசாமியை நடிக்கவைக்க ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் முடிவெடுத்தார். ஆனால் பி.ஏ. பெருமாள் ஒரு புதுமுக நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற முடிவுடன் ‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்த கணேசனைக் கதாநாயனாக நடிக்க வைக்க விரும்பினார்.

திருச்சியில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனுக்கு விமான டிக்கட்டுடன் சென்னையிலிருந்து சினிமாவில் கதாநாயனாக நடிக்க அழைப்பு வந்தது. 1951-ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் சக்ஸஸ் சக்ஸஸ் என்ற முதல் வசனத்துடன் தன் கலையுலக வாழ்வை ஆரம்பித்து, சினிமாவில் வெற்றி நாயகனாக அரை நூற்றாண்டுக் காலம் திகழ்ந்தார்.

அழியாத பிம்பங்கள்

‘பராசக்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள், புராண, சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள், எதிர்மறையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் தன்னுடைய நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், நடை, உடை பாவனையாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சிறந்த நடிகனாக உருமாறினார். சிவன், கர்ணன், வ.உ.சி., கட்டபொம்மன் போன்றோரை நினைக்கும்போது நம் நினைவில் சிவாஜியின் முகமே நிழலாடும். தந்தை, மகன், அண்ணன், கணவன் எனப் பல்வேறு உறவு முறைகளை அழியாத திரைப் பிம்பங்களாக மாற்றினார்.

கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து...



தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று 305 திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சிறந்த நடிகருக்கான ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்ம, பத்மபூஷன் விருது, திரைத்துறை வித்தகருக்கான தாதாசாகேப் பால்கே விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியே விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய அன்னை இல்லத்தின் மேல் ஒரு சிறுவன் புத்தகம் படிப்பது போன்ற ஒரு சிறிய சிற்பத்தை வைத்திருந்தார். அவர் வாழ்ந்த சென்னை, தியாகராயநகர், தெற்கு போக் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலகமே அவரைக் கவுர வித்தது. 1962-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்திலுள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2001-ல் அவர் மறைந்த பிறகு மத்திய அரசு அவருக்குத் தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் சார்பில் புதுச்சேரியிலும், தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டன.

திரைக்கு அப்பால்

திரைப்படங்களைத் தாண்டியும் அவரது பங்களிப்பு நீண்டது. சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடிகர் சங்கத்துக்காகக் கலை அரங்கத்தைக் கட்டினார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்குச் சிலை அமைத்து அந்த இடத்தை நினைவுச் சின்னமாகச் சொந்தச் செலவில் பராமரித்தார். மும்பையில் வீ ரசிவாஜி சிலை அமைக்கப் பொருளுதவி வழங்கினார். சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்துக் கொடுத்தார். தன் மனைவி கமலா அம்மாள் போட்டிருந்த நகைகளை யுத்த நிதிக்காகத் தந்ததுடன், ரூ.17 லட்சம் தொகை வசூலித்துக் கொடுத்தார். மதிய உணவுத் திட்டத்துக்காகப் பிரதமர் நேருவிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். பெங்களுர் மக்கள் நலனுக்காக ‘கட்டபொம்மன்’ நாடகத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காமராஜர் சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை.

கலையுலகை வென்ற கலைஞனை 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் நாள் காலன் வென்றுவிட்டான். அவர் தன் நடிப்பால் மக்கள் மனதில் பெற்ற இடம் மகத்தானது, நிரந்தரமானது. காலன் உள்பட யாராலும் வெல்ல முடியாதது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024