Tuesday, December 20, 2016

5 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர்... இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?



'vikatan.com

கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.



ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)

ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.

மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)

மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை. அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.

வி.என். சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.



டி.டி.வி. தினகரன்

வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.

வி.பாஸ்கரன்

வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார். சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர், ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இராவணன்

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

ராமச்சந்திரன்

நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.

கலியபெருமாள்

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.

பழனிவேலு

நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.

தங்கமணி

மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

- ஏ. ராம்

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...