Tuesday, December 20, 2016

சசிகலாவுக்கு கேள்வி எழுப்பும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.!?

vikatan.com

திருச்சி : "அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது?. ஜெயலலிதாவுக்கு பிறகு ஜனநாயகப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கொள்ளைபுறமாக ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடாது," என திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் தெரிவித்தார்.

தலைமை ஏற்கச்சொல்லி சசிகலாவை அ.தி.மு.க.வினர் கூட்டம் கூட்டமாக சென்று வரவேற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் சின்னம்மா என்ற அடைமொழியுடன் சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் சசிகலா தான் கட்சித்தலைமையை ஏற்க வேண்டும் என அழைப்பது போல ஒரு உணர்வு தமிழகத்தில் வியாபத்திருக்கிறது. ஆனால் சசிகலாவுக்கு எதிர்ப்புகளும் கட்சியில் இருக்கத்தான் செய்கின்றன.

இதனை பிரதிபலிக்கும் வகையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது என கேள்வி எழுப்பி இருகிறார் திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கே.சவுந்திரராஜன். 1977ம் ஆண்டு துவங்கி 1984ம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இன்று வரை அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.

அவரிடம் பேசினோம். "அம்மாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இவற்றை தீர்க்க வேண்டியது அவசியமான ஒன்று. அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது வரை நடந்தவை குறித்தும், அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட வேண்டும். இது குறித்து உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும்.

அம்மாவுக்கு பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள். இவர்களுக்கு கட்சி மீது அக்கறையில்லை. பதவி கிடைத்துவிட்டது அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அதைவைத்து கொள்ளையடிக்க வேண்டும். அதற்காக அம்மாவுக்கு பிறகு சசிகலா என்கிறார்கள்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது. அம்மா வீட்டில் வேலை செய்தவர்களை எல்லாம் கட்சியின் தலைவராக்கிவிடுவது ஜனநாயகமுள்ள கட்சிக்கு அழகா?. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்துவது எந்தவிதத்தில் சரி?.

அவர்கள் அடித்த கொள்ளை நாட்டுக்கே தெரியும். அப்படிப்பட்டவரை கட்சி தலைவராக்கினால், தமிழகம் தாங்காது. மக்கள் அம்மாவை நம்பிதான் ஓட்டுப்போட்டார்கள். இப்போது அவருக்கு பிறகு ஜனநாயகப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கொள்ளைபுறமாக ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடாது.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதை எம்.ஜி.ஆரின் விசுவாசிகளும், உண்மையான தொண்டர்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனால் அ.தி.மு.க.வை மக்கள் கைப்பற்றும் நிலை வரக்கூடும்.

இந்தக் கொள்ளை கும்பலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரவாயில்லை. ஜனநாயகப்படி நல்ல தலைமையை தேர்த்தெடுக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. சசிகலா தான் கட்சியை தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூடி முக்கிய முடிவெடுப்பார்கள்," என்றார்.

- சி. ய.ஆனந்தகுமார்,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024