Thursday, December 22, 2016


இருளில் ஓர் ஒளிக்கீற்று

By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் | Published on : 22nd December 2016 01:40 

| மருத்துவப் பணி, சேவை, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பணியாகும். மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு கிட்டுவதில்லை. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட முடியாத நிலை.சமூக விழாக்களிலும், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு மருத்துவர்களுக்கு அரிதாகவே கிட்டுகிறது. பொதுமக்களும் மருத்துவர்களை கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றுகின்றனர்.
எல்லா துறைகளிலும் விழுமங்களின் வீழ்ச்சி ஏற்பட்டது போலவே புனிதமான மருத்துவ துறையிலும் நிகழ்ந்தது. மருத்துவம் வணிகமயமாகியது. எண்பதுகளுக்கு பின் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் குறைந்து கார்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாகிய பின்னர் மருத்துவர்களும் கார்ப்பரேட் சிந்தனைகளுக்கு உள்ளாகிவிட்டனர்.
தேவையற்ற பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள், மருந்துகள், ஒரு புறம். எழுதுகின்ற மருந்துகளுக்கும், பரிசோதனைகளுக்கும், மருத்துவமனை அட்மிஷன்களுக்கும் கமிஷன்கள், உயர்ரக பரிசுகள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் என இன்னொரு புறம். இதன் உச்சகட்டமாக உடல் உறுப்பு தான மோசடியும் நடைபெறுகிறது.
புனிதமான மருத்துவத் தொழிலில் புகுந்துவிட்ட இந்த கருப்பு ஆடுகள் குறித்து, மருத்துவர்கள் நீண்டகாலமாக எழும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல நல்ல உள்ளங்களை முடக்கிப் போட்டது.
இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்று, கதிர்வீச்சு மருத்துவர்களிடமிருந்து வந்துள்ளது மனதிற்கு இதமாக உள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் (மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா) கீழ் இயங்கும் இந்திய கதிரியக்க கழகத்தின் (Indi​an Radiologists and Im​aging Asso​ci​ation)​​ இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளது.
கதிரியக்க மருத்துவர்கள், ஸ்கேன் மைய உரிமையாளர்கள் என 1,300 பேர் பங்கேற்ற இவ்வமைப்பின் பொதுக்குழு,
பரிசோதனைக் கூடங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. கதிரியக்க பரிசோதனைகளுக்கும், ஸ்கேன்களுக்கும் இனி மருத்துவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் கமிஷன்கள் தரப்பட மாட்டாது.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் அதிகபட்ச கட்டணத்தையும் முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம் மருத்துவர்களின் பெயர்களை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் வருமான வரி துறைக்கும் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிப்பு பலகை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். துணிச்சலான இந்த முடிவுகளை எடுத்த கதிரியக்க மருத்துவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள்.
கதிரியக்க மருத்துவக் கழகத்தினர் எடுத்த இந்த முடிவுகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் நோயுற்றவர்களின் செலவு கணிசமாக குறையும்.
கமிஷன் தருவது நிறுத்தப்பட்டால் ஸ்கேன்களின் கட்டணம் பாதியாக குறைந்துவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு தேவையற்ற ஸ்கேன்களுக்கும், பரிசோதனைகளுக்கும் சிபாரிசு செய்யும் நிலை மாறும்.
அதிக கட்டணங்களை வசூலிக்கும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும், ஸ்கேன் சென்டர்களும் தங்களின் செயலை நியாயப்படுத்த சில காரணங்களை கூறுகின்றனர். பல லட்சங்களை செலவிட்டு உபகரணங்களை வாங்கி தொழில் தொடங்குகிறோம். கதிரியக்க படிப்பில் இடம் கிடைப்பதற்காக சில கோடிகளை நன்கொடையாக கொடுத்துள்ளோம்.
எனவே இவற்றைச் சரிகட்ட அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில் உள்ளோம் என்று கூறி தமது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயலுகின்றனர்.
நேர்மையான முறையில் சம்பாதித்தாலே நல்ல வருவாயை ஈட்ட முடியும் என்றிருக்கும்போது, குறுக்கு வழிகளை கையாள வேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கும் இப்போது ஸ்கேன் மோகம் வந்துவிட்டது. சாதாரண நோய்களுக்கும் ஸ்கேன் எடுக்கச் சொல்லி மருத்துவர்களை வற்புறுத்துகின்றனர். ஸ்கேன் எடுக்கும் மருத்துவரே சிறந்த மருத்துவர் என்ற மனப்பான்மை மக்களிடம் உருவாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் நிபுணர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.
இங்கிலாந்தில் எந்த வியாதியானாலும், முதலில் பொது மருத்துவரைப் (Gener​al Pr​a​ctioner)​​ பார்க்க வேண்டும். அவர் சிபாரிசு செய்தால் மட்டுமே நிபுணர்களை பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. நமது நாட்டிலும் இந்த நிலை பின்பற்றப்பட்டால் தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க முடியும்.
அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் குறைந்த செலவில் செய்யப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள இந்த வசதியை பரவலாக்கினால் மக்களுக்கு சுமை குறையும்.
மருத்துவக் கல்வி திட்டத்தில் நன்னெறி (Ethi​cs) சார்ந்த போதனைகளும் சேர்க்கப்பட்டு அக்கறையுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
மருத்துவர்கள் நடத்தும் மாநாடுகளில் நன்னெறி பற்றிய உரைகளும் தவறாது இடம் பெற வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நன்னெறி சார்ந்த வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும். பணத்தைவிட குணமே முக்கியமானது என்பதை அவர்கள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.
அரசுத் துறை, நீதித் துறை, ஊடகத் துறை, சேவைத் துறை, ஆன்மிகத் துறை என எல்லா துறைகளிலும் மலிந்துள்ள தவறுகளை அந்த துறைகளைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசி அவற்றை களையும் முயற்சியில் ஈடுபட்டால் நாடு வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...