Thursday, December 22, 2016

தலைமைச் செயலர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை: ரூ. 5 கோடி தங்கம், ரூ. 30 லட்சம் புதிய நோட்டுகள், 43 ஆவணங்கள் பறிமுதல்

By DIN  |   Published on : 22nd December 2016 05:07 AM

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீடு உள்பட 14 இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த விவரம்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும், கட்டுமான தொழிலதிபராகவும் இருந்த இவர், முறைகேடான வழியில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆற்று மணல் குவாரிகளை தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி,அதில் முறைகேடு செய்து வந்தாராம். இதன் மூலம் அவர் பல நூறு கோடி ரூபாய் ஈட்டியதாகத் தெரிகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் உதவி புரிந்ததாகவும், சிலருக்கு சேகர் ரெட்டி பினாமிபோல செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவர் நண்பர்கள் சீனிவாசலு வீடு, பிரேம் குமார் வீடு ஆகியவற்றில் கடந்த 8-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனை நடத்தி,ரூ.147 கோடி பணமும்,178 கிலோ தங்க கட்டிகளையும்,தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.34 கோடி, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
இதற்கிடையே சேகர் ரெட்டி தொடர்பான விசாரணையில் சிபிஐயும், மத்திய அமலாக்கத்துறையும் இணைந்தன. இந்த இரு புலனாய்வு அமைப்புகளும் தங்களது விசாரணையைத் தொடர்ந்தன.
இதில் சேகர் ரெட்டி முறைகேடாக பணம் சம்பாதித்தது, முறைகேடான வழியில் பணப் பரிமாற்றம் செய்தது, தவறான வழியில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது ஆகிய புகார்கள் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன.


14 இடங்களில் சோதனை: இந்நிலையில் சேகர் ரெட்டியிடமும், அவரது கூட்டாளிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சேகர் ரெட்டி, வருமான வரித்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகர் ஒய் பிளாக் 6ஆவது பிரதான சாலையில் உள்ள மூன்று தளங்களுடன் கூடிய ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடத்துவதற்கு,வருமான வரித் துறையினர் சென்னை மண்டல கூடுதல் ஆணையர் ராய் ஜோஸ் தலைமையில் புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அங்கு சென்றனர். வருமான வரித்துறையினர் ராம மோகன ராவ் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவரது வீட்டுக் காவலாளி தடுத்துள்ளார்.
அப்போது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதாம். சப்தம் கேட்டு அங்கு வந்த ராம மோகன ராவ் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். அதன் பின்னரே வருமான வரித் துறை அதிகாரிகள், ராம மோகன ராவ் வீட்டுக்குள் சென்றனர்.
ராம மோகன ராவிடம் சோதனை செய்வதற்கான உத்தரவைக் காட்டிய பின்னர், வருமான வரித் துறையினர் அங்கு சோதனையைத் தொடங்கினர். சோதனை தொடங்கியதும், ராம மோகன ராவ் வைத்திருந்த செல்லிடப்பேசி உள்ளிட்ட வீட்டில் இருந்த அனைவரது செல்லிடப்பேசிகளையும் வருமான வரித் துறையினர் வாங்கி வைத்துக் கொண்டனர்.
அதோடு தொலைபேசி இணைப்பையும் துண்டித்தனர். வீட்டில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சோதனை தொடங்கப்பட்ட வேளையில், ராம மோகன ராவின் மணப்பாக்கம் வீடு, திருவான்மியூர் அப்பாசாமி நகரில் உள்ள அவரது மகன் விவேக் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
அதேபோல கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய இடங்களில் உள்ள ராம மோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நண்பகலுக்குப் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அறையிலும் சோதனை நடத்தினர்.
துணை ராணுவம் குவிப்பு: இதற்கிடையே ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடைபெறும்போது, அங்கு வந்த ஆம் ஆத்மி தொண்டர் செந்தில்குமார், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த சில நபர்கள் அவரைக் கண்டித்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர், செந்தில்குமாரைத் தாக்கினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், செந்தில்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு துணை ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் 4 கார்களில் வந்தனர். அவர்கள் சோதனை நடந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்த சென்னை போலீஸார், ராம மோகன ராவ் வீடு இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்றனர்.
பாதுகாப்பு கருதி துணை ராணுவத்தை அழைக்கும் அதிகாரம் வருமான வரித் துறைக்கு இருப்பதால், துணை ராணுவத்தினர் அங்கு பாதுகாப்புக்கு வந்ததாக அத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சோதனை நடைபெற்ற பெரும்பாலான பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
ரூ. 5 கோடி தங்கம், பணம் பறிமுதல்: இச் சோதனையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்கமும், பணமும் பறிமுதல் செய்யப்பட்ட வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. இதில் புதிய ரூபாய் நோட்டுகளாக ரூ.30 லட்சம் இருந்ததாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் 43 ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சோதனை பல இடங்களில் நடைபெற்றதால், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம், நகை, ஆவணங்கள் ஆகியவற்றின் விவரத்தை இறுதியிலேயே தெரிவிக்க முடியும் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமைச் செயலர் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது அரசு உயர் அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024