மம்தா போல் வீறுகொண்டு எழுவாரா ஓ.பன்னீர் செல்வம்
சிலநாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தாவிற்குத் தெரியாமல், கொல்கத்தா மாநில போலீஸின் அனுமதி இல்லாமல் ஏதோ வழக்கமான பயிற்சி என்கிற பெயரில் தலைமைச் செயலகம் அருகில் துணை நிலை ராணுவ வீரர்களை மத்தியஅரசு இறக்கியது.
இந்த தகவல் முதல்வர் மம்தாவுக்கு தெரியவந்ததும், கொதித்து எழுந்துவிட்டார். 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 12 ராஜ்யசபா உறுப்பினர்கள்..என்று 46 பேர்கள் மம்தா கட்சியில் உள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு மிரட்டும் பாணியில் மாநில அரசு அதிகாரத்தில் மூக்கை நுழைக்கிறது என்று பிரதமர் மோடிக்கு எதிராக போர்கொடி தூக்கினார். டெல்லியில் உள்ள மேற்கு வங்காள எம்.பி.கள் இதுகுறித்து பாராளுமன்றத்தில் புகார் செய்தனர். அதன்பிறகுதான், மத்திய அரசு பணிந்தது. ஏதேதோ சாக்குப் போக்குகளை சொல்லி சமாளித்தது.
இதேபோல், தமிழகத்திலும் இன்று நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் ஏரியாவில் குடியிருக்கும் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் தெருவில் இருப்பவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தூரத்தில் இருந்து கவனித்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக போலீஸார் சரிவர நடந்துகொள்ளவில்லை. மோதல் சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று டெல்லிக்கு தகவல் சொல்ல...மத்திய ராணுவத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடனே துணை நிலை ராணுவப்பிரிவை அண்ணாநகருக்கு அனுப்பிவைத்தார்.
தலைமைச் செயலாளர் வீட்டை அந்தப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மின்னல்வேகத்தில் தலைமைச் செயலகத்துக்கு வந்து உயர் அதிகாரிகள் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37, ராஜ்யசபா உறுப்பினர்கள் 13...என்று 50 பேர்கள் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். இருந்தும் கூட, மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சென்னை போலீஸ் அனுமதி இல்லாமல் திடீரென துணைநிலை ராணுவப்படையினர் மத்திய அரசு இறக்கியிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக நடவடிக்கைக்கு மேற்கு வங்க மம்தாவே கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எப்படி ரியாக்ட் பண்ணப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.
- ஆர்.பி
No comments:
Post a Comment