Tuesday, June 27, 2017

10 நாள்களில் 15 பேர் பரிதாப சாவு.. பழங்குடி கிராமத்தில் நடந்த சோகம்!

அஷ்வினி சிவலிங்கம்
ஆந்திராவில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் நச்சுத்தன்மை நிறைந்த உணவு மற்றும் அசுத்தமான நீர் உட்கொண்டதில் கடந்த 10 நாள்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.




ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சப்பராயி என்னும் குக்கிராமத்தில் இந்த இறப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்துக்குச் செல்ல சாலைவசதி கிடையாது. மேலும், தொலைபேசி இணைப்புகள் கிடையாது.

கடந்த சில நாள்களாகவே இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு ராம்பச்சோதவாம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் அக்கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் திடுக்கிடும் செய்தியை வெளியிட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து அந்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேய மிஸ்ரா கூறுகையில் ‘இறந்தவர்களில் ஐந்து பேர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கெட்டுப்போன இறைச்சி உண்டதால் இறந்துள்ளனர். மற்றவர்கள் அசுத்தமான நீர் அருந்தியதால் காய்ச்சல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சில கிராம மக்கள் ‘நாங்கள் அருந்தும் குடிநீர் மாசடைந்துவிட்டது. அரசு குடிநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025