Thursday, June 1, 2017

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 85% தீ கட்டுக்குள் வந்தது: தீயணைப்புத் துறை துணை இயக்குநர்


தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் | படம்: க.ஸ்ரீபரத்.

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 85% தீ கட்டுக்குள் வந்தது என்று தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனக் கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ பிடித்த கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய கரும்புகை, அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 150 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் உதவியுடன் 50 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 10 நிமிடத்துக்கு ஒரு லாரி வீதம் தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி கூறுகையில், ''தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 85% தீ கட்டுக்குள் வந்தது. முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை ஓரளவு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். 7-வது தளத்தில் அதிகளவில் தீ எரிந்து வருவதால் அதனை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 16 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024