Thursday, June 1, 2017

"நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் சாப்பாடு!'' - பழம்பெரும் நடிகை கீதா கண்ணீர்

எம்.குமரேசன்

வயதானவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடும் அவலநிலை தற்போது அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதுபோல, முதியோர் இல்லங்களும் திறக்கப்பட்டுவருகின்றன. சாதாரண மனிதரிலிருந்து பிரபலங்கள் வரை இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. பழம்பெரும் இந்தி நடிகையான கீதா கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



இவர் நடித்த படங்களில் மீனாகுமாரியுடன் நடித்த 'பகீஷா ' மற்றும் 'ரஷ்ய சுல்தான் ' படங்கள் பிரசித்திப்பெற்றவை. வயது முதிர்ந்த நிலையில், தன் மகனுடன் வசித்துவந்தார் கீதா. கடந்த ஏப்ரல் மாதம் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்ததால், மயக்க நிலையில் இருந்தார். உடனே மும்பை கிர்காவ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்; கீதாவின் மகன் ராஜாவிடம் முன்பணம் செலுத்துமாறு கூறினர். தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும், தனது தாய்க்கு உடனடியாக சிகிச்சை செய்யுமாறும் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்துவருகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்ற ராஜா, மீண்டும் மருத்துமனைக்குத் திரும்பவே இல்லை. தாயைக் கைவிட்டு ஓடிவிட்டார். மருத்துவர்கள், அவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டபோது பதிலே இல்லை. எனினும் கீதாவைப் பற்றி அறிந்த மருத்துவர்கள், அவருக்குச் சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றினர்.

மருத்துவமனை நிர்வாகம், ராஜா வீட்டுக்கு ஆள் அனுப்பியது. கீதாவை மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த நாளே, தான் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பை ராஜா காலி செய்துவிட்டதாகவும், மூன்று மாத வாடகை பாக்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. மருத்துவமனையில் நினைவு திரும்பியவரிடம் சிகிச்கைக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. அதைச் செலுத்திவிட்டு வீட்டுக்குப் போகும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கீதாவோ, 'என்னிடம் பணம் இல்லை' என்று கதறி அழுதுள்ளார். நடிகை கீதாவின் நிலைமையைப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.



செய்தியைக் கேள்விபட்ட சென்சார் போர்டு உறுப்பினர் அசாக் பண்டிட், தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று கீதாவைச் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவச் செலவு ஒன்றரை லட்சம் ரூபாயைச் செலுத்தினர். இதுகுறித்து சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் கூறுகையில், ''தற்போதைய நிலையில் அவரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். 'பில் ' செலுத்துவது பெரிய விஷயம் அல்ல. அவரை யாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் எனக்குப் பெரிய கவலை'' என்றார் வேதனையுடன்.

இதற்கிடையே முதியோர் இல்லம் ஒன்று அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது. கீதா கபூருக்கு, ராஜா என்கிற மகனும், பூஜா என்கிற மகளும் இருக்கின்றனர். மகனுடன் வசித்துவந்த கீதாவுக்கு, நான்கு நாள்களுக்கு ஒருமுறை ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால்தான் அவருக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ``என்னை முதியோர் இல்லத்தில் சேர, மகன் வற்புறுத்தினான். நான் மறுத்தேன். பெற்ற தாய் என்றுகூட பார்க்காமல் தினமும் அடித்து உதைத்தான். சாப்பாடுகூட தரவில்லை. அதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது'' என்றார் கண்ணீர் மல்க.

மருத்துவமனை நிர்வாகம், கீதாவின் மகளைத் தொடர்பு கொண்டபோது, 'ராங் நம்பர்' எனக் கூறி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். போலீஸார், கீதாவின் குடும்பத்தினரைத் தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...