Thursday, June 1, 2017

சென்னையில் அதிகரிக்கும் வெறி நாய்கள்..! என்ன காரணம்?

ந.பா.சேதுராமன்





மனிதனுடன் மிகவும் ஒன்றிப்பழகி விடுகிற ஜீவன்களில் நாய்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. படுக்கையறை வரை நாய்களை அனுமதிப்பதோடு, ஒரே போர்வையில் அவை நுழைந்து கொள்வதற்கும் சம்மதிப்போர் எண்ணிக்கை அண்மைக்காலமாக பெருகிக்கொண்டு வருகிறது. இதனால், நாய்களின் உடல்மீது ஊறும் சிறுபூச்சிகள், அட்டைபோல் ஒட்டிக்கொள்ளும் ரத்த உண்ணிகள் அதே போர்வையில் தங்கி மனித உடலில் 'நாய்சொறி'யை ஏற்படுத்தும் என்பதை உணர மறுப்பதில்தான் ஆபத்து ஆரம்பிக்கிறது. இந்த 'சொறி நோய்' நாய்களுக்கு ஆரம்பத் தாக்கம்தான். அவை நாளடைவில் அவற்றுக்கு மெல்ல, மெல்ல 'வெறி நோயாக' மாற்றம் பெறுகிறது. நாய்களுக்கு வெறிநோய் ஏற்படுவதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது, கண்ட இடங்களிலும் வீசிச்செல்லும் கறிக்கோழி கழிவுகளை நாய்கள் தின்பதுதான். மனிதர்களின் தேவைக்காக, பிராய்லர்வகைக் கோழிகளை ஒரே மாதத்தில் மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை வளர்ச்சியடையச் செய்து, விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற வளர்ச்சியை இயற்கையாக வீடுகளில் வளர்க்கப்படும் 'நாட்டுக்கோழிகள்' பெறமுடியாது. செயற்கையான வளர்ச்சிக்காக, பிராய்லர் கோழிகளுக்கு ஊசி போடப்படுவதுடன் ரசாயன மருந்துகளும் செலுத்தப்படுகிறது. இவை, மனித உடலுக்குப் பொருந்தாத விஷயங்கள் என்பதால், இந்தவகைக் கோழிகளை உண்பதால் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. தவிர, கோழிகளின் கழிவுகள், குறிப்பாக அவற்றின்இரைப்பைக்கு பக்கத்தில் உள்ள பித்தப்பையில் இருக்கும் நச்சுத்தன்மை, மனித உடலில் அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கடைகளில் கறிக்கோழிகளை வெட்டும்போது முதலில் பிரித்தெடுப்பது, அவற்றின் பித்தப்பைகளைத்தான். ஏனெனில், பித்தப்பையில் உள்ள நச்சு கசியுமானால், மொத்த கோழிக்கறியிலும் கசப்புத்தன்மை ஏறி, முழுவதும் நஞ்சாக மாறிவிடும். எனவே, தெரு நாய்கள் கோழிக்கழிவுகளைச் சாப்பிடும்போது, நஞ்சுப்பையையும் சேர்த்தே உண்ணும் நிலை உள்ளது.

தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறித்தன்மைக்கு கோழிகளின் 'பித்தப்பை' கழிவே முக்கியக் காரணமாக அமைகின்றன என்பதை சூழலியலாளர்கள் பலமுறை சுட்டிக்காட்டியபோதிலும், கோழி இறைச்சி வணிகர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சென்னை கொடுங்கையூரிலும், பெருங்குடியிலும் மலைபோன்று குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து வெளியேறும் விஷவாயுக்கு இந்தக் கோழிக்கழிவுகளே முக்கியக் காரணமாகின்றன. குப்பைகளில் இருந்து கசியும் விஷ வாயுவை அப்பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.



'ரேபிஸ்' எனப்படும் வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான வெறிநாய், மனிதனைக் கடித்து விட்டால், அதன் கடிவாயிலிருந்து புறப்படும் கிருமியானது, மனிதர்களின் மூளைக்குள் எளிதில் நுழைந்து நரம்பு மண்டலத்தில் தொடங்கி, உடலின் பல பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளான நாய் கடிக்கக்கூடத் தேவையில்லை; நக்கினாலே போதும். மனிதனுக்கு மரணவாயில் தொடங்கிவிடும். ரேபிஸ் கிருமி தாக்கப்பட்டால், தொண்டையில் வலி, குமட்டல், வாந்தி, மயக்கம், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நாளடைவில் இத்தாக்குதல், மனிதர்களைப் படுக்கையில் விழவைத்து விடும். பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகக்கூட முடிந்து விடும். மேலும் வெறிநாய்க் கடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களுக்கு அருகில்கூட காண்பிக்க மாட்டார்கள். உடனடியாக எரித்துவிட வலியுறுத்துவார்கள். அப்போதுதான், அந்தக் கிருமித்தொற்று அழியும் என்பதால் இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

உலகெங்கிலும் வெறிநாய்க்கடிக்கு உயிரிழப்போரில், 45 சதவீதத்தினர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியரே. வெறிநாய்க்கடி குறித்த விழிப்புஉணர்வு இல்லாமலேயே மக்களின் அன்றாட வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. வெறிநாய்க்கடிக்கு போடப்படும் ஊசி மருந்துகளின் விலை மிகவும் அதிகம். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாயாகும். வெறிநாய்க் கடிக்கு ஆளானவர்களின் தொப்புளைச்சுற்றி 16 ஊசிகள் போட வேண்டும் என்ற நிலைமாறி, தற்போது ஐந்து ஊசிகளை இடைவெளி விட்டு போட்டால் போதும் என்றளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெறிநாய்க்கடிக்கு அதிகவிலை கொடுத்து ஊசிபோடும் அளவுக்கு ஏழை மக்களின் பொருளாதாரநிலை இல்லை. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஒருநாளில்தான் வெறிநாய்க் கடி ஊசி போடப்படும் நிலையில், வாரத்தில் எந்த நாளில் ஊசி போடுகிறார்களோ அதுவரை, கடிபட்ட நபர் காத்திருக்க நேரிடுகிறது. அதிலும், போதுமான அளவு ஊசி மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே. வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, எந்த விலங்குகளையும் பிடிக்கவோ கொல்லவோ முடியாது. தெருநாய்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் அமைப்புகள், வெறிநாய்கள் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் சொல்வதில்லை.

அளவுக்கு அதிகமாக நாக்கினை வெளியே தள்ளியபடி, எச்சில் ஒழுக ஓடிக் கொண்டிருக்குமானால், அது வெறிபிடித்த நாய் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெறிநாயை மற்ற நாய்கள் விரட்டாது; கடிக்காது; தூரமாக நின்று குரைப்பதுடன் மற்ற நாய்களை 'அருகில் போகாதே' என்று எச்சரிக்கை செய்யும். நோய் தாக்கிய நாயானது, ஒரு இடத்தில் நிற்காமல்,, படுக்கவும் முடியாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனில் ஆரம்பித்து, ஆடு, மாடு, கோழி, பூனை என எதிர்ப்படும் அனைத்தையும் கடிக்கும். வெறிநாய்க்கடிக்கு ஆளாகும் மனிதர்களில் சிலருக்கு அதன் பாதிப்பு உடனே தெரியும். வேறு சிலருக்கு பத்துநாள்கள் வரை ஆகக்கூடும். பொதுவாகவே நாய்க்கடித்து விட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வெறிநாய்க்கடியால் உயிரிழப்போரில் பெருமளவு சதவிகிதத்தினர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று உலக சுகாதார நிறுவன தகவல் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னையை பொறுப்பில் இருப்பவர்கள், சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து போகக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...