Sunday, June 25, 2017

ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்

oneindia
சென்னை: ஐடி நிறுவன பெண் ஊழியர் சுவாதியின் மரணம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொடூர சம்பவம். கொல்லப்பட்ட விதமும், அந்த கொலையை துப்புதுலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையும் ஊடக உலகில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்.

சுவாதி மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால் சுவாதியின் கொலையும், கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமாரின் மரணமும் இன்றைக்கும் பலரது மனதில் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

ஜூன் 26, 2016 ஆண்டு வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார் சுவாதி. 8 தனிப்படை போலீசார் தமிழகம் முழுவதும் சல்லடை போட்டு தேடியதில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை போலீஸ் கைது செய்தது.

கழுத்தறுபட்ட நிலையில் ராம்குமார் கைது செய்யப்படவே, சிகிச்சைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார் ராம்குமார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுவாதி கொலையும், ராம்குமார் கைதும் ஊடகங்களுக்கு நல்ல தீனியாக அமைந்தன. 85 நாட்கள் கழிந்து செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை கூறியது. சுவாதி கொலை போலவே ராம்குமார் மரணமும் புரியாத புதிராகவே முடிந்து போனது.

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இறந்து போனதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற குற்றவியல் நடுவர், சுவாதி கொலை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

சுவாதி கொலை சம்பவத்துக்கு பிறகு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக் களை கட்டாயம் பொருத்த வேண்டுமென நீதிபதி என்.கிருபாகரன் விடுத்த வேண்டுகோளை ஏற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். அதன்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் ராம்குமாரின் உறவினர்கள், சுவாதி, ராம்குமார் மரணங்களை தேசிய புலனாய்பு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சுவாதியின் மரணத்தில் உள்ள மர்மமுடிச்சுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படத்திற்கும் தடை கோரியுள்ளனர்.

சுவாதியை ராம்குமார் ஒருமுறை கூட நேரில் பார்த்ததேயில்லை என்பது அவரது வழக்கறிஞர் ராம்ராஜின் வாதம். அனைவரையும் போல சுவாதியை ஃபேஸ்புக்கில் பார்த்துதான் தெரிந்து கொண்டார். சுவாதி கொலையில் ராம்குமார் நிரபராதி என்று நிரூபிப்போம் என்றும் கூறியுள்ளார் ராம்ராஜ்.

சுவாதி கொலை சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. கொலைக்கான காரணம் என்ன என்பது மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது. அதேபோல ராம்குமாரின் மரணம் பற்றிய புதிரும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. சந்தேக கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். விடை கிடைக்குமா?

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...