டாஸ்மாக் : ஆண்களுக்கு வேண்டும்... பெண்களுக்கு வேண்டாம் - ஒரே இடத்தில் போராட்டம்!
திருவள்ளூர் : டாஸ்மாக் கடை வேண்டும் என்று ஆண்களும், வேண்டாம் என்று பெண்களும் திருவள்ளூரில் எதிர் எதிரே ஒரே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றிற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டமும், அதில் போலீஸ் அதிகாரிகள் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல்களும்.
இதனையத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்கள் விறுவிறுப்படைந்தன. திருப்பூர் மாவட்டம் கஞ்சம்பாளையத்தில் டாஸ்மாக் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும், 24 மணி நேரமும் அங்கு மது விற்பனை ஜோராக நடைப்பதால் பெண்களும், குழந்தைகளும் பாதிப்படைவதாக கூறி இன்று பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மாணவன் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே படூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கடையை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க கூடாது என இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் என்ற மாணவன் குடியை விடு, படிக்க விடு! என்ற பதாகையை ஏந்தியபடி பள்ளி சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டான்.
மதுவால் வாழ்க்கைக்கு உலை
ஏற்கனவே இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளில் மாற்று இடங்களில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்ப டாஸ்மாக் கடைகளை சூறையாடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். மதுப்பழக்கத்திற்கு ஆண்கள் அடிமையாகி வருவதால் ஏழைக்குடும்பத்தினரின் வாழ்க்கைக்கு உலை வைக்கப்படுவதாக போராட்டதில் ஈடுபடுபவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆண்கள் ஆதரித்து போராட்டம்
இந்நிலையில் ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூரில் மதுக்கடை அமைக்கக் கோரி ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் ஆண்களுக்கு அருகில் மதுக்கடை கூடாது என்று பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் போராட்டம் நடத்தியதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
source: oneindia.com
Dailyhunt
No comments:
Post a Comment