Friday, June 2, 2017

மயில்கள் இனப்பெருக்கம் பற்றி நீதிபதி சொன்ன கண்ணீர்க் கதை... எது உண்மை?
பழனிச்சாமி





“மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன. பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கும் தெய்வீகப்பறவை அது. இந்துக்களின் புனித நூலில் ஒன்றான பகவத் புராணத்தில் இந்தத் தகவல் உள்ளது. மேலும், இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.”

இப்படி ஒரு அதிரடித் தகவலைக் கூறியிருப்பவர்.. யாரோ பாமரன் அல்ல. ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா என்பவர். இவரது இந்தக் கண்ணீர்க் கதை உலக அளவில் வைரல் ஆகியுள்ளது.

சரி.. இதில் எந்த அளவு உண்மையுள்ளது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக நாம் சந்தித்த நபர், மயில்களைப்பற்றி நீண்டகாலமாக ஆய்வு மேற்கொண்டு வருபவரும், ‘மயிலு’ என்னும் 40 நிமிட ஆவணப்படத்தின் இயக்குநரும், ஊர்ப்புறத்துப் பறவைகள் என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான கோவை சதாசிவம்.

“நீதிபதி சர்மாவின் பேச்சு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. சட்டம் படித்த ஒரு மனிதர் இப்படியெல்லாம் பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர் சொல்லும் கண்ணீர்க் கதையில் கடுகளவும் உண்மையில்லை. கண்ணீரில் உயிரணுக்கள் எப்படி இருக்கமுடியும்? கோழி இனத்தைச் சேர்ந்த பெரிய பறவைதான் மயில். கோழி எதையெல்லாம் உண்ணுகிறதோ அதையெல்லாம் மயில்களும் உண்ணும். சேவல் கோழி, பெட்டைக்கோழிமீது ஏறி மிதித்து இனப்பெருக்கம் செய்வது போலத்தான் ஆண் மயில் தோகை விரித்து ஆடி பெண்மயிலைக் கவர்ந்து இழுத்து அருகில் வர வைத்து பெண்மயில்மீதி ஏறி உடலுறவு கொள்ளும். இது பல முறை நான் நேரில் பார்த்த நிகழ்வு.



பெண்மயில்கள் ஒரு தடவையில் அதிக பட்சம் 9 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகளை, கரடுமுரடான புதர்ப் பகுதியில் மண்ணைக்கிளறிப் போட்டுவைத்து கோழிகள் செய்வது போலவே அடைகாக்கும். இதுதான் நிதர்சனம்.
கண்ணீரைக்குடித்து கர்ப்பம் தரிக்கின்றன மயில்கள் என்பது வெறும் கேலிக்கூத்து” என்றார் சதாசிவம்.

“பறவைகள் எப்போதும் அழுவதில்லை....” என்பதாக கவிஞர் வைரமுத்துவின் பாடல்வரி ஒன்று உண்டு. அது நீதிபதிக்குத் தெரியவில்லை போலும், தெரிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டார்.

மயில்கள் பற்றிய சில தகவல்கள்:

ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen.

இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).

ஆண் மயிலுக்குத் தமிழ் மொழியில், சேவல் என்ற பெயரும் உண்டு.

1972-ஆம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாள்களைவிட, மழைக்காலங்களில் அதிகமுறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.

ஆண் மயிலின் வண்ணமயமான தோகை, பெண் மயில்களை ஈர்க்கவும், பிற விலங்குகள் தாக்க வரும்போது, தனது தோகையை விரித்துக் காட்டி பயமுறுத்தவும் பயன்படுத்தும்.

மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.

அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.

மயில் தோகையின் வேறு பெயர்கள்... சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி.

1963-இல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024