Friday, June 23, 2017

முதுமை - தனிமை - வறுமை

By ஆசிரியர்  |   Published on : 22nd June 2017 05:27 AM  |  
இந்திய மக்கள்தொகையில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 65% என்று நாம் ஒருபுறம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இருப்பது வளர்ச்சிக்கான அறிகுறிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் இந்தியா இன்னொரு பிரச்னையையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவின் அதிவேக பொருளாதார முன்னேற்றத்தை இளைஞர்களின் மனிதவள சக்தி உறுதிப்படுத்தும் வேளையில் அதனால் கிடைக்கும் பலன்களை இன்னொருபுறம் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதார நிபுணர்களுக்கு மிகப்பெரிய கவலையை அளிப்பது அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
ஏறத்தாழ 10.4 கோடிக்கும் அதிகமான முதியோர்களின் எண்ணிக்கை, அதிகளவிலான சமூக பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. அதனால், முதியோர்களுடைய தேவைக்கு ஏற்ற மருத்துவச் சேவையையும் அவர்களைப் பாதுகாப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இவற்றின் தேவை அதிகரித்திருக்கிறது.
இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 20% பேர் 2050}இல் 60 வயது கடந்தவர்களாக இருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இப்போது இருக்கும் 8%லிருந்து கணிசமான அளவுக்கு ஆண்டு
தோறும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்ளத் தேவையான சுகாதார சமூக பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப நாம் திட்டமிடவோ செயல்படவோ இல்லையென்பதும் முதியோரைப் பேணுதல் என்பதில் எந்தவித முனைப்பும் காட்டாமல் இருக்கிறோம் என்பதும்தான் உண்மை.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியோர் பேணல்களுக்கான பலதரப்பட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. எளிதில் மருத்துவ வசதி தரப்படுவதற்கான மருத்துவமனைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, முதியோர் பேணல், முதியோர் தொடர்பான மருத்துவச் சிகிச்சை ஆகியவை முதியோருக்கான சிறப்பு மருத்துவமனைகளின் மூலம் மிக அதிக அளவு ஏற்
படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இதுபோன்ற திட்டமிட்ட ஏற்பாடுகள் குறித்து நாம் இன்னும் சிந்திக்கவே தொடங்கவில்லை.
முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் தொடர்பான நோய்களும் அதற்கான மருத்துவச் சிகிச்சைகளும் மாற்றம் காணுகின்றன. தொற்றுநோய்களிலிருந்து நோய்த் தொற்று அல்லாதவை என்று மருத்துவச் சிகிச்சையில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தடுப்பு, பாதுகாப்பு, சிகிச்சை, மறுவாழ்வு என்று மருத்துவப் பாதுகாப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்துத் திட்டமிடலும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதும் தேவைப்படுகிறது.
முதலில் முதியோர் குறித்த சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும். இதுகுறித்துத் தீவிரமான விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் புரிதலையும் ஏற்படுத்தியாக வேண்டும். முதியோர்கள் தங்கள் இறுதிக்கால வாழ்க்கையை கெüரவமாகவும் பாதுகாப்பாகவும் கழிப்பதற்கு சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டியது மிக மிக அவசியம். குடும்பங்களால் புறக்கணிக்கப்படுதல், அநாதையாக விடப்படுதல், குடியிருக்க இடமில்லாமல் தவித்தல், நல்ல மருத்துவக் கண்காணிப்புக்கு வழியில்லாமல் போவது, எந்தவித நிறுவன உதவியும் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை முதியோர் பரவலாக எதிர்கொள்ளும் வேதனைகள்.
குடும்பங்களிலிருந்து பிரிய நேர்வதால் ஏற்படுகின்ற தனிமையும் அதனால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி அனுபவிக்கும் வேதனையும் கைவிடப்பட்ட முதியோர் பரவலாக எதிர்கொள்ளும் பிரச்னைகள். மேலைநாடுகளைப் போல அல்லாமல் இந்தியக் குடும்பங்களில் குழந்தைகள் முதியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் பண்பாட்டுக் கூறு குறைந்து வருவது இதற்கு மிகப்பெரிய காரணம்.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரில் 3% தனிமையில் வாழ்கிறார்கள். கணவன் மனைவியாகத் தனிமையில் சேர்ந்து வாழும் முதியோர் 9.3%. தங்கள் குழந்தைகளுடன் வாழும் முதியோர்கள் 35.6%. இந்தப் புள்ளிவிவரம் 2004}இல் வெளியிடப்பட்டது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். பெருமளவில் இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்புத் தேடி வெளியூர்களுக்கு சென்று விடுவதால் தங்கள் பெற்றோரை தங்களுடன் அழைத்துச் செல்லவோ அவர்களது தேவை குறித்து கவலைப்படவோ முடியாத, இயலாத சூழல் பரவலாக காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் போய் குடியேறும்போது குழந்தைகளுடன் குடியேற பெற்றோர்களுக்கு முடியாமல் போவதும், அப்படியே போனாலும்கூட அந்த சூழல் ஒத்து வராததாலும் பெரும்பாலானோர் முதுமையில் தனிமையையே எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
வசதி படைத்தவர்கள் ஓய்வு கால குடியிருப்புகளில் தங்கள் வயதை ஒத்த முதியோர்களுடன் வாழ்ந்து தனிமையை விரட்டுகிறார்கள். தனியார் துறையில் 3 லட்சம் முதியோருக்கான வீடுகள் நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தப்படுகின்றன. வசதியில்லாதவர்கள்? பாதுகாப்பும் அடிப்படை வசதியும் கொண்ட முதியோர் காப்பகங்கள் இன்றைய அவசியத் தேவை. என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...