Thursday, July 6, 2017

மக்கள் கியாஸ் மானியத்தை விட்டுகொடுப்பதைப்போல் ரயில் டிக்கெட் சலுகையையும் கைவிட வேண்டுமாம்..!




பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பெயரில் நாட்டில் வசதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை தாமாக முன் வந்து விட்டுக் கொடுத்தனர். அதேபோல, ரெயில்வேயிலும் டிக்கெட் முன்பதிவில் அளிக்கப்படும் மானியத்தை விட்டுக்கொடுக்க பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட உள்ளதாம்.

இந்த திட்டத்தை அடுத்தமாதம் ரெயில்வேதுறை முறைப்படி அறிவிக்க இருக்கிறது. அதாவது, இப்போது நாம் டிக்கெட் முன்பதிவின் போது செலுத்தும் தொகை என்பது ரெயில்வே துறையைப் பொருத்தவரை 57 சதவீதம் தான். ஏறக்குறைய 43 சதவீதம் கட்டணத்தை ரெயில்வே பயணிகளுக்கு மானியமாக அளித்து வருகிறது.

இந்த 43 சதவீத மானியத்தில்தான் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போர் பயணித்து வருகின்றனர். இதுபோல, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட பலர் 43 சதவீதத்துக்கு அதிகமாக மானியத்தை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த 43 சதவீத மானியத்தை கைவிட்டு உண்மையான டிக்கெட் விலையில், பயணிகள் பயணிக்க வேண்டும் என ரெயில்வே துறை வேண்டுகோள் விடுக்க உள்ளது. இதற்காக அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்ததிட்டத்தில், 50சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தல், 100சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தல் என்ற பிரிவில் இரு திட்டங்களை ரெயில்வே துறை செயல்படுத்த உள்ளது.

ஆன்-லைன் முன்பதிவின்போதும், இந்த இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்,அதில் ஏதாவது ஒரு வாய்ப்பை நமது விருப்பத்தின் பெயரில் தேர்வு செய்யலாம், அதாவது நமது விருப்பத்தின் அடிப்படையில், மானியத்தை விட்டுக்கொடுக்கலாம். அவ்வாறு விட்டுக்கொடுக்கும் போது, கூடுதலாக டிக்கெட் கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியது இருக்கும்.

50 சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தால், 22 சதவீத கட்டணம் கூடுதலாவும், 100சதவீத மானியத்தை விட்டுகொடுத்தால் 43 சதவீதம் கூடுதலாகவும் செலுத்த வேண்டியது இருக்கும்.

சமையல் கியாஸ் சிலிண்டரில் மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் சந்தை விலையில் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்குவதைப்போல், ரெயில் டிக்கெட்டையும் உண்மையான விலையில் வாங்க வேண்டியது இருக்கும்.

தற்போது பயணிகளுக்கு 43 சவீதம் டிக்கெட்டில் மானியம் அளிப்பதால், ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதை ஈடுகட்ட இந்தமுறையை பின்பற்ற உள்ளது.

மேலும், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “ ரெயில் டிக்கெட்டின் பின்புறம், நீங்கள் பயணிக்கும் தொலைவுக்கு 57 சதவீதம் மட்டுமே கட்டணமாக செலுத்துகிறீர்கள், 43 சதவீதத்தை ரெயில்வே மானியமாக அளிக்கிறது” என்று அச்சடித்து வழங்க உள்ளது. இதைப் பார்க்கும் போதாவது, மக்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க முன்வருவார்கள் என்று ரெயில்வே நம்புகிறது.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024