ராகு கோவில் உண்டியல் எரிந்து காணிக்கை பணம் சேதம்
பதிவு செய்த நாள்07ஆக
2017
19:55
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், உண்டியல் எரிந்து, காணிக்கை பணம் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களில் ஒன்றான, ராகு தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராகு காலத்தில், ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை, 27ல், ராகு பெயர்ச்சி நடந்தது. அன்று முதல், பரிகாரம் செய்யும் ராசிக்காரர்கள், தினமும் ராகு கால நேரத்தில், பரிகார பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர். கோவிலின் வெளி பிரகாரத்தில், கொடி மரம் அருகே, 6 அடி உயரத்தில், எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மழையும் பெய்ததால், தண்ணீரில் நனையாமல் இருக்க, உண்டியலை துாக்கி, கோவில் ஊழியர்கள் ஒதுக்குப்புறமாக வைத்தனர். மாலை, 6:00 மணியளவில், உண்டியலில் இருந்து, புகை வெளியேறியது. உடனடியாக, கோவில் ஊழியர்கள், உண்டியலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உண்டியலை திறந்து, காணிக்கையை எண்ணினர். அதில், 1,450 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்திருந்தன. மீதமிருந்த, 45 ஆயிரம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. 'உண்டியலில் யாராவது ஊதுபத்தியை சொருகி வைத்திருக்கலாம்; அவை எரிந்து உண்டியலுக்குள் விழுந்ததால், ரூபாய் எரிந்திருக்கலாம்' என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Advertisement
No comments:
Post a Comment