Tuesday, August 15, 2017


'பெற்றோருக்கு வீடு இருந்தாலும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் அவசியம்'

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:59


புதுடில்லி: 'திருமணமான பெண், குடும்ப பிரச்னையால், கணவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலையில், அவருக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்' என, டில்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துஉள்ளது.

டில்லியை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பெண்ணின் கணவர் முறையீடு செய்தார். 'அந்த பெண், 2006ல், வழக்கறிஞராக பதிவு செய்தவர்; தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்' என, மனுவில், கணவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, தீபக் கார்க் பிறப்பித்த உத்தரவு: கணவர் வீட்டில் வசிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணுக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த பெண்ணின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு இருந்தாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குடும்ப வன்முறை வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி, தீபக் கார்க் உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024