சுதந்திர தின விழா: டில்லியில் பலத்த பாதுகாப்பு
பதிவு செய்த நாள்
ஆக 15,2017 06:25
புதுடில்லி: நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றுவதை முன்னிட்டு, கடுமையான பாதுகாப்பு அரண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என அடுத்த கொண்டாட்டங்கள் காரணமாக, டில்லியி்ல் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டில்லி செங்கோட்டையைச் சுற்றி மட்டும் ஒன்பதாயிரத்து 100 போலீசார் உள்ளிட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய வீரர்கள், கமாண்டோக்கள், துணை ராணுவத்தினர் என செங்கோட்டை பல அடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி போலீசாரின் 60 மோப்ப நாய்களும் இந்தப் பணிகளில் பங்கேற்றுள்ளன.
பிரதமர் உரையாற்றும் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்து முறியடிக்க 25 வாகனங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, பிரதமர் மோடி உரையாற்றும் பகுதியின் வழியே பாராகிளைடிங், பலூன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லியி்ல் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மதியம் 2 மணி வரை வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் மோடி கொடியேற்றுவதைப் போல, அனைத்து மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றுகின்றனர். எனவே, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment