சேலத்தில் 2 போலி டாக்டர்கள் கைது
ஆகஸ்ட் 19, 2017, 03:45 AM
சேலத்தில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் மருத்துவப்படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், ஊசி போடுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் வளர்மதி, துணை இயக்குனர்(தொழுநோய்) குமுதா மற்றும் போலீசார் பொன்னம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த அருண்பிரகாஷ்(வயது 44) என்பவருடைய கிளினீக்கில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சித்த மருத்துவம் படித்துவிட்டு அவர் அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அருண்பிரகாசை அம்மாபேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அங்கப்பன் கைது செய்தார். மேலும் அந்த கிளினீக்கில் இருந்து ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல் மன்னார் பாளையம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு மருந்துக் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஊசி போட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.பார்ம் படித்துள்ள சிவராமன்(35) என்பவரை வீராணம் போலீசார் கைது செய்தனர்.
சிவராமனுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகும். கைதான 2 போலி டாக்டர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment