சர்வீஸ் ரிஜிஸ்டருக்கு டாட்டா; கணினிமயமாகுது டேட்டா!செப்டம்பரில் வருகிறது புது திட்டம்
பதிவு செய்த நாள்20ஆக
2017
00:19
கோவை:'பகல்லயே தண்ணிய போட்டுட்டு, ஆபீஸ்ல அந்தாளு பண்ற அலப்பற தாங்க முடியல. இன்னிக்கு ஒரு முடிவு கட்டிரலாம். கொண்டு வாய்யா அந்தாளு சர்வீஸ் புக்கை!'- இப்படி அதிகாரிகள் உத்தரவு போட்டாலும் இனி நினைத்தவுடன் சர்வீஸ் புக்கையெல்லாம் கொண்டு வர முடியாது. யாராலும் அதில், 'ரிமார்க்ஸ்' எழுத முடியாது.
ஏனென்றால், செப்டம்பர் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியரின் சர்வீஸ் புக்கும், கணினிமயமாகப் போகிறது. இதற்கான பணிகள், மாவட்டம் முழுவதும் விறுவிறுவென நடக்கிறது. அரசு அலுவலகங்களில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை, மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
இதில், அரசு ஊழியர்களின் விபரங்கள் அடங்கிய பணி பதிவேடுகளை, கையாளும் கருவூலத்துறையை முழுமையாக, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு முன் னோடியாக, தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 288.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, விப்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சுமார், 23 ஆயிரம் பேர், இணையத்தின் உதவியுடன் சம்பள பட்டியலை, நேரடியாக கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். திட்டத்தின் வாயிலாக, தமிழகம் முழுவதும் உள்ள, ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணி பதிவேடு பராமரிப்பு, கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு உள்ளிட்ட விபரங்கள், உடனுக்குடன் பதியப்படும்.
தற்போதுள்ள சர்வீஸ் புக்கில், அதிகாரி ஏதாவது 'ரிமார்க்' எழுதி விட்டால், அந்த குறிப்பிட்ட பக்கத்தை கிழிக்கலாம்; கையெழுத்தை மாற்றிப் போட்டு 'கோல்மால்' செய்து விட முடியும். டிஜிட்டல் பணி பதிவேட்டில், துறை அலுவலர் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். வேறு யாரேனும் அதில் தவறுகள் செய்தாலும், நேரம், நாள் வாரியாக விபரத்தை தெரிந்து கொள்ள முடியும். கருவூல அலுவலர்களுக்கான தற்போதுள்ள, பொறுப்புகள் குறையும். பணி பதிவேட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.டிஜிட்டல் கையெழுத்து மற்றும் பயோமெட்ரிக் பதிவு ஆகிய அம்சங்கள், முக்கிய பாதுகாப்பு அம்சங்கள். திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, மாநிலத்தின் நிதிநிலை விபரத்தை, அரசு உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
நிதி நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மை, துரிதகதியில் நடைபெற திட்டம் உதவும். திட்டத்தை செயல்படுத்த உதவும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்கள், இணையதள வசதிகள், அனைத்து அலுவலகங்களிலும் நிறுவப்பட்டு வருகின்றன.சென்னை சம்பள கணக்கு அலுவலகம் (கிழக்கு), திருவண்ணாமலை, கரூர், ஈரோடு மாவட்டங்களை, 'மாதிரி மாவட்டங்களாக' கொண்டு, அங்கு இத்திட்டம் முதலில் துவங்கப்படவுள்ளது.
இம்மாவட்டங்களில் ஏறக் குறைய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. 32 ஆயிரம் அரசுப் பணியாளர்களைக் கொண்ட கோவை மாவட்டத்தில், இதற்கான பணிகள், துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
காலதாமதத்தை தவிர்க்கலாம்!
மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் அரசு அலுவலர்களின் பணி பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி, 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. அக்டோபருக்குள் இப்பணிகள் முடியும். கோவை நகரில் மட்டும், 284 அலுவலகங்களில், 13 ஆயிரத்து 341 ஊழியர்கள் மற்றும், 950 பணம் வழங்கும் அலுவலர்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். திட்டம் முழுமையடைந்து விட்டால், எஸ்.ஆர்., எனப்படும் பணி பதிவேடே இருக்காது. அனைத்தும் எலக்டிரானிக் சர்வீஸ் ரிஜிஸ்டர் எனப்படும், 'இ - எஸ்.ஆர்.,' ஆக மாறி விடும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாவட்டத்தில் உள்ள சுமார், 768 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், இணையத்தின் உதவியுடன் சம்பள பட்டியலை, நேரடியாக கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கலாம்.இவ்வாறு, நடராஜன் கூறினார்.
No comments:
Post a Comment