Sunday, August 20, 2017

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய பாரதியார் பல்கலை! காமராஜர் பல்கலை தொடர்பான யு.ஜி.சி., பதிலால் அம்பலம்


பதிவு செய்த நாள்19ஆக
2017
19:40

எல்லையைத் தாண்டி, தொலைத்துார கல்வி மையம் நடத்த, எந்த பல்கலைக்கும் அனுமதியில்லை என்று, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவை, கோவை பாரதியார் பல்கலை. அப்பட்டமாக மீறியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், யு.ஜி.சி., அளித்துள்ள பதிலால் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பிலும், தொலை துார கல்வி மையங்கள் நடத்தப்படுகின்றன. துபாயில் அனுமதிபல்கலை மானியக்குழுவின் கீழ் செயல்படும் தொலைத்துார கல்வி அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, அந்தந்த பல்கலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இவை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த மையங்கள், எல்லை தாண்டியும், விதிகளை மீறியும் செயல்படுகின்றன.கோவை பாரதியார் பல்கலை தான், இந்த விதிமீறலில் உச்சத்தில் இருக்கிறது. இந்த பல்கலையின் எல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. ஆனால், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தொலைத் துார கல்வி மையங்களை நடத்த, தனியாருக்கு அனுமதியை வாரி வழங்கி வருகிறது. 

அந்த மையங்களில் சேர்வோருக்கு, தேர்வு நடத்தி, சான்றிதழ்களையும் வழங்குகிறது.இத்தகைய மையங்களின் வழியாக பெறப்படும் சான்றுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என, பல்கலை மானியக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. தொலைத்துார கல்வி மையங்களை நடத்த, பாரதியார் பல்கலைக்கு அனுமதி இல்லை என்றும்தெளிவு படுத்திய பல்கலை மானியக்குழு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக உயர் கல்வித்துறை செயலருக்கும்அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையையும் உயர் கல்வித்துறையும் எடுக்கவில்லை.இதனால், 'தொலைத்துார கல்வி மையங்கள் நடத்த, நடப்பு கல்வியாண்டில் அனுமதி வழங்கப்போவதில்லை' என, உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த பல்கலை நிர்வாகம், அதற்குப் பின்னும், பல்வேறு பகுதிகளில் மையங்கள் துவக்க அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில், துபாயில் தொலைத்துார கல்வி மையத்தைத் துவக்குவதற்கு, பாரதியார் பல்கலை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

இந்நிலையில், பாரதியார் பல்கலையைப் பின்பற்றி, மதுரை காமராஜர் பல்கலை, சமீபத்தில் தன் எல்லையைத் தாண்டி, தொலைத்துார கல்வி மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டது. இதை உடனே நிறுத்த வேண்டுமென்று, காமராஜர் பல்கலை நிர்வாகத்துக்கு தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம் கடிதம் எழுதியது. அதற்கு பல்கலை நிர்வாகம் எந்த பதிலும் அனுப்பவில்லை.இதனால், காமராஜர் பல்கலைக்கு, தொலைத்துார கல்வி மையம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, பல்கலை எல்லையைத் தாண்டி, இந்த மையங்களை நடத்தலாமாஎன்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழங்குமாறு, பல்கலை மானியக்குழுவுக்கு இச்சங்கத்தின் தலைவர் கலீல், மனு அனுப்பிஇருந்தார்.

அதற்கு, பல்கலை மானியக்குழுவிலிருந்து வந்துள்ள பதிலில், 'காமராஜர் பல்கலை, மாநில பல்கலை; அதன் மாநில எல்லைக்குள் மட்டுமே, அது செயல்பட வேண்டும். கடந்த, 2005ல், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, எந்த பல்கலையும் அதன் எல்லையைத் தாண்டி, தொலைத்துார கல்வி மையம் நடத்துவதற்கு அங்கீகாரம் கிடையாது. இது தொடர்பாக, 2013 ஜூலை 27ம் தேதி, பொது அறிவிக்கையும் பல்கலை மானியக்குழு இணையத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது. இத்தகைய மையம் எதற்கும், பல்கலை மானியக்குழு எந்த நிதியும்வழங்காது; காமராஜர் பல்கலைக்கு, இந்த ஆண்டில் தொலைத்துார கல்வி மையம் நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உச்ச நீதிமன்றம் உத்தரவை, பாரதியார் பல்கலை அப்பட்டமாக மீறியுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, உயர் நீதிமன்றத்தில் கொடுத்த உறுதியை மீறி, தொலைத்துார மையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எதையும் மதிக்காமல், இந்த மையங்களை நடத்த அனுமதிப்பதில், பல்கலை நிர்வாகிகளுக்கு, 'பலன்' இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதன் காரணம் தான், புரியாத புதிராகவுள்ளது.




No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...