நேற்று திறப்பு; இன்று மூடல்! மக்களுடன் மல்லுக்கட்டிய அதிகாரிகள்
நெல்லையில் கட்டி முடிக்கப்பட்டு நீண்டகாலமாகத் திறக்கப்படாமல் இருந்த மேம்பாலத்தைப் பொதுமக்களே திறந்து போக்குவரத்தைத் தொடங்கிய நிலையில், அதை அதிகாரிகள் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நெல்லை-பாபநாசம் சாலையில் ஆரைக்குளம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ல் தொடங்கியது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட இந்தப் பகுதி வழியாக எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் செல்லும். இதனால், இந்த இடத்தில் 30 முறை ரயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் அடிக்கடி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த இடத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்தன.
பாலத்தின் கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படவில்லை. பாலப் பணிகள் காரணமாக பாபநாசம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு சுற்றிச் செல்லும் வகையில் மாற்றுச் சாலை வசதி செய்யப்பட்டது. இதனால் இந்த மார்க்கமாகச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஒருவழியாகப் பாலம் கட்டப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். இனி தங்கள் பிரச்னை தீரும் என நம்பினார்கள்.
ஆனால், பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பாலத்தைத் திறப்பதற்கான வழியே இல்லை. பாலத்தின் தொடக்கப் பகுதியில் அடைத்து வைத்து இருந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பாலத்தைத் திறக்க மேலிடத்தில் அனுமதி கேட்கப்பட்டதாகவும், உரிய பதில் இல்லாததால் போக்குவரத்துக்குத் திறக்கப்படவில்லை எனவும் விரைவில் திறக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனால், அந்த வழியாகச் செல்லும் பயணிகளும் வாகன ஓட்டிகளும் அதிருப்தியடைந்தனர். அவர்களே அந்தப் பாலத்தைத் திறந்து போக்குவரத்தைத் தொடங்கினார்கள். நேற்று முழுவதும் அந்த மேம்பாலத்தின் வழியாகப் போக்குவரத்து நடைபெற்றது. இது பற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் இன்று விரைந்து வந்த அதிகாரிகள் அந்தப் பாலத்தில் நடந்த போக்குவரத்தை தடுத்துநிறுத்தினர். பாலத்தில் இரும்புக் கம்பியைப் போட்டு தடுப்பு உருவாக்கினர். இதனால் மீண்டும் வாகன ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றியபடி செல்ல வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. இது வாகன ஓட்டிகளையும் பயணிகளையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment