Monday, August 28, 2017

மாநில செய்திகள்

வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 28, 2017, 05:15 AM
சென்னை,

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் வழியாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டில் 7 செ.மீ., பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 5 செ.மீ., கேளம்பாக்கம், வால்பாறையில் தலா 4 செ.மீ, பூந்தமல்லி, காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ, சிதம்பரம், பொன்னேரி, மகாபலிபுரம், எண்ணூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூரில் தலா 2 செ.மீ, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, தாமரைப்பாக்கம், வானூர், சேலம், சோழவரம், திருவள்ளூரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...