Friday, August 18, 2017

நீட் அவசரச் சட்டம்... நீதிமன்றத்தில் தப்புமா?

vikatan
நீட் தகுதித் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி, தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் கொண்டுவந்தும், அவற்றுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தராமல் மத்திய அரசு இழுத்தடித்தது. பின்னர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கீடு செய்து கொண்டுவந்த அரசாணையை நீதிமன்றங்கள் அடுத்தடுத்து ரத்து செய்தன. ‘தமிழக அரசு மட்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொல்லைப்புறமாக ஏன் இந்த முயற்சி..?’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து அரசாணையை ரத்து செய்தபோது, கடைசி வாய்ப்பும் பறிபோனதாகவே தமிழக அரசு நினைத்தது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே வாரம் ஒருமுறை டெல்லி வந்து தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பிரதமர் முதல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை பலரையும் சந்தித்தனர். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்று நாள் முழுவதும் காத்துக்கிடந்தனர். தமிழக அதிகாரிகளோ, மத்திய அரசு அதிகாரிகளிடம் பல அவமானங் களை அடைந்தனர். ‘‘சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டோமே... பிறகு ஏன் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கிறீர்கள்..?” என்று பல புறக்கணிப்புகள், அவமானங்கள்.
கடைசியாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவி ஏற்புக்கு முதல்வர் எடப்பாடி வந்து, பிரதமரைச் சந்தித்து நீட் விலக்கு கோரி மனு கொடுத்தபோதும் எந்த அனுகூலமான பதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஓராண்டு விலக்கு கோரினால் பரிசீலிப்போம்’’ என்று சொல்ல... புதிய வெளிச்சம் உதயமானது. நீட் விலக்கு கோரி படையெடுத்த தமிழக அரசிடம் நேரடியாக இதைத் தெரிவிக்காமல், நிர்மலா சீதாராமன் மூலம் மீடியா வழியாக அறிவித்தது மத்திய அரசு. அதன்பிறகு அடித்துப் பிடித்து ‘இரண்டு ஆண்டு விலக்கு கோரி’ மத்திய அரசிடம் கடந்த வாரம் கொடுத்த அவசரச் சட்ட வரைவினை ‘ஓராண்டு விலக்கு’ என்று மாற்றி, அந்த ஆவணங்களுடன் டெல்லி விரைந்தார் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 

திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கே மத்திய உள்துறை அலுவலகம் வந்த அவர், நண்பகல் வரை இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.கே.மித்ரா மற்றும் அதிகாரிகளிடம் போராடினார். பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அவரை ஓடவிட்டனர். நொந்துபோய் மதியம் வெளியில் வந்தார் ராதாகிருஷ்ணன். மதிய உணவு இடைவேளைக்குப் பின் அனைத்து ஆவணங்கள், கூடுதல் நகல்கள் என்று கேட்ட அனைத்தையும் அள்ளிக்கொண்டுவந்து தாக்கல் செய்தார். அவற்றை உள்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டபிறகே அனைவரும் பெருமூச்சு விட்டனர். மாலை ஐந்து மணி வரை அங்கேயே இருந்து, ‘சந்தேகம் எதுவும் இல்லை’ என்று சொன்னபிறகே தமிழ்நாடு இல்லம் திரும்பினர்.

‘தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறார்கள். பழைய சேர்க்கை முறைப்படி ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான தமிழக மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். அவர்கள் எல்லாம் இந்த ஆண்டு பாதிக்கப்படுவார்கள். எனவே, ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரி பல்வேறு புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளனர்.
எப்படியும் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றி விடலாம் என்று நம்புகிறது தமிழக அரசு. ஆனால், இயற்றப்போகும் அந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் கழுகுப் பார்வையிலிருந்து தப்புமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நீட் தேர்வை எழுதி வெற்றிபெற்று கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவ சீட் நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் சார்பில் நளினி சிதம்பரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வைத்தார். இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும் என்ற யூகத்தில், அவர்கள் இப்போதே நளினி சிதம்பரத்தை அணுகி வருகிறார்கள். அவரும், ‘‘ஆவணங்களுடன் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன்’’ எனச் சொல்லி இருக்கிறார். எனவே, இந்த அவசரச் சட்டம் தாக்குப்பிடிக்குமா என அதிகாரிகள் அச்சத்தோடுதான் இருக்கிறார்கள். 

ஒருவேளை அப்படி நீதிமன்றம் தடை போட்டால், ‘நாங்கள் வழங்கினோம்... நீதிமன்றம்தான் தடுத்து விட்டது’ என்று பி.ஜே.பி-யினர் தப்பித்துக்கொள்வார்கள்.  அ.தி.மு.க அரசின் நிலைதான் திண்டாட்டம். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த  தீர்ப்பின்படி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவ கவுன்சலிங்கைத் தமிழக அரசு முடிக்க வேண்டும்.

- டெல்லி பாலா

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024