Saturday, February 10, 2018

வறண்டாய் வாழி, காவிரி!

By ஆசிரியர் | Published on : 10th February 2018 02:30 AM |

நாகப்பட்டினம், திருவாரூர் பகுதியிலுள்ள ஏறத்தாழ 2.5 லட்சம் ஏக்கர் பரப்பிலுள்ள நெற்கதிர்கள் வாடிவிடுமோ என்கிற அச்சத்தில் விவசாயிகள் தவிப்பில் இருக்கிறார்கள். குறைந்தது இன்னும் மூன்று பாசனங்கள் தரப்படாவிட்டால் அவர்களது உழைப்பும் பணமும் எதிர்பார்ப்பும் வீணாகிவிடும்.

தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகள் காவிரி பாசனப் பகுதிகள் என்றும், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், கீழ்வேளூர், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் வெண்ணாறு பகுதி என்றும் அழைக்கப்படுகின்றன. வெண்ணாறு பகுதியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை என்கிற நிலையில், விவசாயிகள் மிகப்பெரிய அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இந்த முறை காவிரியின் கடைநிலைப் பகுதி விவசாயிகள் அடைந்திருக்கும் துயரத்திற்கு அளவே இல்லை. காரணம், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் அத்தனை பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன. சற்றும் மனம் தளராமல் விவசாயிகள், நேரடி விதைப்பின் மூலம் மீண்டும் பயிரிட முற்பட்டார்கள். அதனால்தான் இந்த சாகுபடியின் காலம் நீட்டிப்படைந்திருக்கிறது. மீண்டும் ஏறத்தாழ ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்களில் 2.5 லட்சம் ஏக்கர்களை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை காணப்படுகிறது.

இந்த முறை நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1.29 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 60,000 ஹெக்டேர் பரப்பில்தான் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும்கூட விவசாயிகள் குறுகிய கால ரகங்களை சாகுபடி செய்ய முற்பட்டனர். பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்து பாசன நீர் கிடைத்தால்தான் இந்த 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்ற நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
சாதாரணமாக ஏக்கருக்கு ரூ.15,000 செலவாகும். இந்த முறை இரண்டு சாகுபடி என்பதால் ரூ.30,000 செலவாகியிருக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தங்களது நகைகளையும், சொத்துகளையும் வங்கிகளில் அடமானம் வைத்து முதலீடு செய்திருக்கிறார்கள். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அவர்கள் காவிரியில் நீர் வருமா, மழை வருமா, பயிர்கள் காப்பாற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கின்றன. வடகிழக்குப் பருவமழைதான் தஞ்சை டெல்டா பகுதிகளுக்கு இந்த சாகுபடிக்கு பயன்படுகிறது. இந்த முறை வடகிழக்குப் பருவமழை 20 விழுக்காடு குறைவாகப் பெய்ததால் காவிரியின் கடைநிலைப் பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை குறைவு என்பது மட்டுமல்ல, நிலத்தடி நீரும் கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. இந்த நிலையில், கடல் நீர் நுழைந்து உப்பு நீராகிவிடக் கூடாது என்கிற கவலையும் விவசாயிகளைத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என்பது இறுதித் தீர்ப்பு. ஆனால், இந்த ஆண்டு இதுவரை 112 டிஎம்சி தண்ணீர்தான் வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 43.21 அடி தண்ணீர் காணப்படுகிறது. அதாவது, நீர் இருப்பு வெறும் 13.8 டிஎம்சி மட்டுமே. இது குடிநீருக்குக்கூட போதாது. கர்நாடகத்தில் 100 டிஎம்சி தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசு உண்மை நிலவரத்தை மறைக்கிறது. தடுப்பணைகள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்கி அவற்றில் நீரைத் தேக்கிவிடுகிறார்கள். அணைகளில் குறைவான நீர் மட்டும் இருப்பதாக கணக்கு தரப்படுகிறது. இதை தட்டிக்கேட்கவோ, சோதனை செய்யவோ இயலாது.

காவிரியில் போதுமான அளவு தண்ணீர் வேண்டுமானால் தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்வதுதான் ஒரே வழி. குடகு மலைப் பகுதிகளில் நீர்பிடிப்புப் பகுதிகளிலுள்ள மரங்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெட்டப்படுவதால் தென்மேற்குப் பருவமழை பொய்க்கத் தொடங்கிவருகிறது. காவிரியில் போதுமான அளவு நீர் வராமல் போவதற்கு இதுதான் முக்கியமான காரணம்.

மேட்டூர் அணை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மூடப்பட்டுவிட்டது. சாதாரணமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையிலிருந்து அக்டோபர் 2-ஆம் தேதிதான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்றாலும்கூட, குறிப்பிட்ட தேதியில் அணை மூடப்பட்டுவிட்டது என்று விவசாயிகள் பொருமுகிறார்கள்.

பிப்ரவரி மாதம் முடியும் வரை மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அத்தனை பயிர்களையும் காப்பாற்றிவிடலாம்தான். ஆனால், கர்நாடகம் கருணை காட்டாமல் மேட்டூர் அணையின் கதவுகளைத் திறந்தாலும் தண்ணீர் நீர்த் தேக்கத்தை விட்டு வெளியேறும் அளவு இல்லை என்பதுதான் உண்மை நிலை. பயிர்கள் மட்டுமல்ல, காவிரி டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகளின் முகங்களும் வாடிக்கிடக்கின்றன.
கர்நாடகம் ஏரிகளிலும், தடுப்பணைகளிலும் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரைக் கருணையுடன் திறந்துவிட்டாலொழிய தமிழகத்தின் கடைமடை சம்பா சாகுபடிப் பயிர்களை காப்பாற்ற வேறு
வழியே இல்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்குள்ள காங்கிரஸ் ஆட்சி காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடாது. அப்படியே திறந்துவிட்டாலும், எதிர்க்கட்சியான பாஜக அதற்கு சம்மதிக்காது.

736 கிலோ மீட்டர் நீளமுள்ள காவிரி ஆறு, 320 கிமீ. கர்நாடகத்தில் பாய்கிறது. மீதமுள்ள 416 கி.மீட்டர் தமிழகத்தில்தான் பாய்
கிறது. ஆனாலும் என்ன பயன்... குடிப்பதற்கும் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லையே...

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...