Monday, December 24, 2018

பனி மூட்டம்.. கண் அயர்ந்த டிரைவரால் நெல்லையில் விபத்து - அதிகாலையில் 6 பேர் பலியான சோகம்!


பி.ஆண்டனிராஜ்


நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரு அரசுப் பேருந்துகளும் ஒரு வேனும் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். 16 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டம் மற்றும் வேன் டிரைவர் தூங்கியதால் இந்த சாலை விபத்து நடந்துள்ளது.



நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனி அதிகமாகப் பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் சாலையே தெரியாத அளவுக்குக் கடுமையான பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்று அதிகாலை முதலாகவே லேசாகச் சாரல் மழை பெய்து வருவதால் சாலைகளில் அருகில் இருக்கும் நபரைக் கூடத் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக உள்ளது.


இந்த நிலையில், காரைக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்திப் பயணமாக ஒரு குடும்பத்தினர் வேனில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேனை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு பனிமூட்டம் மற்றும் மழை ஆகியவற்றின் காரணமாக வேனை ஓட்ட இயலவில்லை. அதோடு, வேன் டிரைவர் லேசாகக் கண் அயர்ந்ததால் நான்கு வழிச்சாலையின் ஒருமுனையில் இருந்து வேன் மறுமுனைக்குச் சென்றிருக்கிறது.


அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து நிலை தடுமாறியுள்ளது. தத்தளித்தபடியே சாலையில் ஓடிய வேன் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் முயன்றபோது சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியிருக்கிறது. அதனால் அதிருப்தி அடைந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், வேன் டிரைவரை மறித்து வாய்த்தகறாறு செய்திருக்கிறார். பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு மீண்டும் வாகனங்களை எடுத்திருக்கிறார்கள்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் தனது பேருந்தைப் பின்னால் எடுத்து வேனுக்கு முன்பாகச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மதுரை-நெல்லை அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அருகில் வந்த பின்னரே சாலையில் ஒரு பேருந்து நிற்பதே தெரியவந்துள்ளது. அதனால், இரு பேருந்துகளும் மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக இரு பேருந்துகளுக்குள்ளும் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வாகன இடிபாடுகளில் சிக்கினார்கள். இந்த கோர விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் 16 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024