Tuesday, March 3, 2015

ஆதார் இலவச விண்ணப்ப படிவம் ரூ.50-க்கு விற்பனை: சேலத்தில் நூதன மோசடி

சேலம் மாவட்டத்தில் அரசின் இலவச ஆதார் விண்ணப்பத்தின் நகலை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 34 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மத்திய, மாநில அரசின் பல்வேறு சலுகை, நிதி உதவி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை விளங்கி வருகிறது. ஆதார் அட்டை வழங்குவதற்காக பள்ளிகளில் முகாம் அமைத்து வழங்கும் பணி நடந்தது. 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை பெற்ற நிலையில், மீதியுள்ளவர்கள் ஆதார் அட்டை பெறவில்லை.

இந்நிலையில், ஆதார் அட்டை உள்ளவர்கள் மட்டுமே காஸ் சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் என்று மத்திய அரசு திடீரென அறிவிப்பு வெளியிட்டது. பின், நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஆதார் அட்டை காஸ் சிலிண்டர் மானியம் பெற தேவையில்லை என அறிவித்தது. இருப்பினும், பல காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் ஆதார் அட்டையை நுகர்வோர்களிடம் கேட்டு வற்புறுத்தி வருகின்றன.

மேலும், அரசின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை பிரதானமாக உள்ளதால், பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 11 தாலுக்கா அலுவலகம், நான்கு நகராட்சி அலுவலகம், மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என மொத்தம் 20 இடங்களில் ஆதார் அடையாள அட்டை புகைப் படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை எடுத்தவர்களின் குடும்பத்தில் விடுபட்டவர்களுக்கும், கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கும், வார்டு விட்டு வார்டு, தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடந்து வருகிறது.

புதியதாக ஆதார் அடையாள அட்டை வேண்டுவோருக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கும் புதியதாக விண்ணப்ப படிவம் இலவசமாக அளிக்கிறது. தற்போது, அரசின் இலவச விண்ணப்ப படிவங்கள் குறைந்த அளவே வந்துள்ளன.

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கூடுதல் விண்ணப்பம் வந்த பின்னரே, புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுப்பவர்களுக்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

குறைந்தளவு ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவம் வந்துள்ள நிலையில், அவற்றை நகல் எடுத்து மக்களை ஏமாற்றி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர். அரசு இலவசமாக அளிக்கக் கூடிய ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை மட்டுமே ஆதார் புகைப்பட மையங்களில் எடுத்துக் கொள்கின்றனர். விண்ணப்பத்தை நகலை எடுத்துக் கொண்டு வருபவர்களை திரும்ப அனுப்பி விடுகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்தில் ஆதார் விண்ணப்ப படிவத்தின் நகல் கன ஜோராக விற்பனை நடக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைகளிலும், சிலரும் விண்ணப்ப படிவ நகலை, மக்களிடையே ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.

ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் மையம் ஆண்டு முழுவதும் இயங்கும் என்பதையும் புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டியவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற அரசின் விழிப்புணர்வு விளக்கத்தை மக்களிடம் தெளிவாக எடுத்து கூறதாததாலே, இதுபோன்ற மோசடி கும்பல் நூதன முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். எனவே, ஆதார் விண்ணப்ப நகலை விற்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024