Friday, March 6, 2015

7 ரூபாய்க்கு இன்னமும் சினிமா!

புரொஜெக்டரில் கார்பனை எரியவிடும் ஆபரேட்டர் செல்வமணி.

மலைக்கோட்டைக்கு அருகே பழமை மாறாமல் கம்பீரமாக நிற்கிறது திருச்சியின் முதல் திரையரங்கான கெயிட்டி. அறுபது, எழுபதுகளில் எப்போதும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டத்துடன் காணப்பட்ட கெயிட்டி திரையரங்கில் அண்மையில் காதலிக்க நேரமில்லை கதாநாயகன் ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள் படம் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று பகல் காட்சிக்கு 76 பேர் வந்ததே அதிகம் என்ற நிலை. இத்தனைக்கும் முதல் வகுப்பு கட்டணம் ரூ.20, இரண்டாம் வகுப்பு ரூ.15, மூன்றாம் வகுப்பு ரூ.7 (பெண்கள் மட்டும்) எனக் குறைவாக இருந்தும் ரசிகர்களின் வருகை அதிகம் இல்லை.

இந்த நிலைக்கு என்ன காரணம்? திரையரங்கின் மேலாளர் இக்பாலிடம் பேசியபோது இன்றைய ரசனை இடைவெளியை உணர முடிந்தது. “புதிய படங்கள் திரையிடும் அளவுக்கு திரையரங்கில் நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்ய முடியவில்லை, அதற்குரிய வருமானமும் கிடைப்பதில்லை. மிக முக்கியமாக இங்கு திரையிடப்படும் பழைய படங்களை பார்க்கும் மனநிலையில் இன்றைய தலைமுறையினர் இல்லை.

அப்படியே ஒரு சில புதிய படங்கள் திரையிட்டால், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பழைய நடிகர்களின் படங்களை ரசிப்பவர்கள், புதிய படங்கள் தங்களுக்குப் புரிவதில்லை என புலம்புகின்றனர். இதனால் இந்தத் திரையரங்க மட்டுமல்ல, தமிழகத்தில் 1950-க்குப் பின் கட்டப்பட்டு தற்போது எஞ்சியுள்ள சில திரையரங்குகள் கடந்த தலைமுறை ஆட்களுக்கானதாக மாறிவிட்டன.

தமிழகத்தின் முதல் தியேட்டரான சென்னை கெயிட்டி உட்பட 300-க்கும் அதிகமான திரையரங்குகள் தற்போது இல்லை. தமிழகத்தில் இன்னும் சிங்கிள் புரொஜெக்டர் மூலம் கார்பன் எரித்து சினிமா காட்டும் ஒருசில திரையரங்குகளில் திருச்சி கெயிட்டியும் ஒன்று” என்று கூறியபோது அவரது முகத்தில் பெருமிதம் மின்னியது.

ஆனால் இந்தத் திரையரங்கின்ஆபரேட்டர் செல்வமணியிடம் பேச்சுக் கொடுத்தபோது துயரம் நிரம்பிய ஒரு யதார்த்த சினிமாவைப் பார்த்ததுபோல மனம் கனத்துப் போனது. “35 ஆண்டுகளாக தியேட்டர் ஆபரேட்டர் வேலையில் இருக்கிறேன். முன்பெல்லாம் ஆபரேட்டர் என்றாலே ஒரு மரியாதை இருந்தது. பட இடைவேளையின்போது புரொஜெக்டர் இருக்கும் கேபின் அறையை ரசிகர்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

ஃபிலிம் ரோலைச் சுற்றுவதைப் பார்ப்பதற்கென ஒரு கூட்டம் படம் முடிந்தும் காத்திருக்கும். இன்று பல சிறுநகர திரையரங்குகளில் கூட நவீன க்யூப் டெக்னாலஜியில் படம் ஓடுகிறது. என்னுடன் லைசென்ஸ் வாங்கிய பலர் க்யூப் புரொஜெக்டரில் வேலை பார்க்கிறார்கள். நான் இன்னும் கார்பன் எரித்துக் கொண்டிருக்கிறேன்.

தியேட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் தீபாவளி, பொங்கல் உட்பட எந்த ஒரு பண்டிகையையும் குடும்பத்துடன் கொண்டாடியதில்லை. நடுத்தர வயதுக்காரர்களும், கூலித் தொழிலாளர்களும் இதுபோன்ற தியேட்டருக்கு வருகிறார்கள். வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும் இத்தொழிலை ‘தியேட்டர் முதலாளி’ என்ற கவுரவத்துக்காக மட்டுமே பலர் நடத்துகிறார்கள். கண் முன்னால் ஒவ்வொரு தியேட்டராக மூடப்பட்டு, இடிக்கப்பட்டு வருவதைப் பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கும்.

முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகள் வேலை செஞ்ச இடத்தை விட்டுப் போகும்போது, ஏற்கெனவே இழுபறியில் தியேட்டரை நடத்திய முதலாளியிடம் என்னத்த பெரிதாக எதிர்பார்க்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கு. இனிமேல் எங்களுக்கெல்லாம் எதிர்காலம்னு ஒன்னு இல்லவேயில்லை” என்று வருத்தம் தோய்ந்த குரலில் முடித்தார் செல்வமணி.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024