நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு பெண் சுதந்திரமாக நடமாட முடியும் என்றால் அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம்’ என்று அறுபது வருடங்களுக்கு முன்னால் சொல்லிவிட்டுச் சென்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. இன்று வரை அவரின் கனவு நிறைவேறிய பாடில்லை. நிறைவேறாத தந்தையின் கனவை நிறைவேற்ற வந்ததாலோ என்னவோ அவரின் மகளாக அதாவது ‘இந்தியாவின் மகள்’ ஆகிப்போனாள் நிர்பயா. 'நிர்பயா ' என்றால் தைரியமானவள் என்று பொருள்.
சமீபத்தில் பிபிசி-யின் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம் வெளியானது. அது ஆவணப்படம் என்பதையும் தாண்டி குற்றவாளிகளின் ‘ஆணவப்’ படமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. காரணம் ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து கொலை செய்துவிட்ட குற்ற உணர்ச்சி அவர்களிடத்தில் துளியும் இல்லை. மாறாக குற்றவாளிகளில் ஒருவன் கலாச்சாரம் பற்றி பாடம் எடுக்கிறான்..பெண்களின் நடத்தை, ஒழுக்கம் எனப் பேசி தன் தவறை நியாயப்படுத்துகிறான். அந்த பெண்ணுக்கு அந்த வேளையில் ஆண் நண்பருடன் என்ன வேலை? எனக் கேட்கின்றான். உண்மையில் இந்தக் காட்டுமிராண்டியின் பேச்சு, நம் நாட்டின் பெண்கள் குறித்த நம் மதிப்பீடு என்ன? என்பதை உலகிற்கு உணர்த்தி இருக்கும்.
உலகிலேயே இங்கு மட்டும்தான் பெண்ணானவள் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்குள் குடி ஏற அட்வான்ஸ் (வரதட்சணை) கொடுக்க வேண்டும். கணவனின் தேவை, குடும்பத்தின் தேவை, பிள்ளைகளின் தேவை என எல்லாவற்றிற்கும் தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். அதுபோக சில சமயங்களில் வேலைக்குச் சென்று குடும்பத்தையும் காக்க வேண்டும். பெண் சிசுக் கொலை, ஆசிட் வீச்சு முதல் கௌரவக் கொலைகள் வரை அவள் உடலில் இருக்கும் ஆன்மாவை புரிந்து கொள்ள நாதியில்லை இந்த நாட்டில். ஆனால் அவள் உடல் என்ன மாதிரியான உடை அணிந்து இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி எக்கச்சக்க காரணங்களை அடுக்க ஆட்கள் நிறையவே உண்டு.
20 நிடமிடங்களுக்கு ஒரு பெண் இந்தியாவில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்கிறது புள்ளி விபரம். இரவு 9 மணிக்கு ஆண் நண்பருடன் இந்தியாவின் தலைநகரில், நெரிசல் மிகுந்த டெல்லியில் செல்லும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், குக்கிராமங்களில் இருக்கும் பெண்களின் நிலைமை என்ன? இதற்கு காரணம் என்ன? உண்மையில் இங்கு நிலவும் பாலியல் வறட்சியும்,பாலியல் குறித்த விழிப்புணர்வின்மையும்தான் காரணமே தவிர, பெண்களின் உடையோ, கலாச்சாரமோ அல்ல.
பெண்கள் நலன் குறித்த அதீத விழிப்புணர்வு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் நிலை மாறவேண்டும். அவர்கள் பாதுகாப்பிற்கென பிரத்யேக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அவை எந்தவித சமாதானத்திற்கும் இடமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கு பதிலாக குற்றவாளியின் வாழ்நாளின் கடைசி புணர்ச்சியாக அது இருக்கும் வகையில் ‘என்ன?’ செய்ய வேண்டுமோ ‘அதை’ செய்து முடித்து ஆயுள் தண்டனையுடன் தனிமை சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
நிர்பயாவின் மீதான வன்புணர்ச்சிக்குப் பின் இரும்பிக் கம்பியால் தாக்கப்பட்டது அவள் உடலாக இருக்கலாம்...ஆனால் நிச்சயம் காந்தியின் கல்லறையில் விரிசல் ஏற்பட்டிருக்கும்.
மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது..தினங்களை கொண்டாடுவதை விட மகளிரை கொண்டாடுவோம் என இந்த மகளிர் தினத்தில் சபதமேற்போம்.
-மஹபூப்ஜான் ஹுசைன் (காரிமங்கலம்)
.
No comments:
Post a Comment