Friday, June 19, 2015

பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க விமானி மறுப்பு: 10 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு

கோவையில் பணி நேரம் முடிந்ததாகக் கூறி, புதன்கிழமை இரவு தனியார் விமானத்தின் விமானி, அந்த விமானத்தை இயக்க மறுத்ததால் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள், அடுத்த நாள் காலை வேறு விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பெங்களூரில் இருந்து நாள்தோறும் ஜெட் ஏர்வேஸ் தனியார் விமானம் இரவு 9.45 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடையும். பின்னர், இங்கிருந்து இரவு 10.10 மணியளவில் புறப்பட்டு சென்னை சென்றடையும்.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெங்களூருவில் இருந்து அந்த விமானம் புதன்கிழமை இரவு 10.10 மணியளவில் புறப்பட்டு, இரவு 11.10 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. கோவையில் இறங்க வேண்டிய பயணிகள் மட்டும் இறங்கியுள்ளனர். சென்னைக்கு செல்ல வேண்டிய 45 பயணிகள் விமானத்தில் காத்திருந்திருந்தனர்.
அப்போது விமானி, பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி, விமானத்தை இயக்க மறுத்து, ஓய்வு அறைக்கு சென்றுவிட்டாராம். விமானத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்த பயணிகள் விமானம் புறப்படாதது குறித்து விமான ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். விமானத்தை இயக்க விமானி மறுத்து விட்டதாக ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவித்தனர். இதனால், 15 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டனர். மீதமுள்ள 30 பயணிகள் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் விமான நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டனர்.
பத்து மணி நேரம் காத்திருப்புக்கு பின் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் வேறு விமானம் மூலம் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024