Friday, June 19, 2015

கவிஞர் கண்ணதாசன் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த விளம்பரம்!

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே…

எல்லாக் காலத்திலும் திரையிசை ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகின்ற கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் வரிகள் இவை. இந்தப் பாடல் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் திகட்டாத இனிமைக்காக இன்றளவும் ஆராதிக்கப்படுகிறது. இந்த வரிகளை ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தி அதன் கருத்தை சிதைத்துள்ளனர். இது கவிஞரின் புகழுக்கு இழுக்கு என்று கொந்தளித்தார்கள் கவிஞர் கண்ணதாசனின் ரசிகர்கள்.

நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரி நடித்த புகழ்ப்பெற்ற பாசமலர் திரைப்படத்தில் பி.சுசீலா பாடிய என்றும் இனிக்கும் காலத்தை வென்ற திரைப்பாடல் இது. தூக்கம் வராமல் தவிக்கும் ஜோடியில் பெண் படுக்கையில் புரண்டு படுத்திருப்பார், பின்னனியில் இந்தப்பாடல் ஒலிக்கும். அதாவது தரமான மெத்தையில் படுக்காவிட்டால் மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்று உறக்கம் இல்லாமல் வாடி வதங்கி விடுவீர்கள் என்ற கருத்தில் ஸ்லீப்வெல் மெத்தை விளம்பரம் ஒளிப்பரப்படுகின்றது. உண்மையில் இந்தப் பாடலை கவிஞர் தளிர் போன்ற அழகான குழந்தையை சீராட்டும் வண்ணம் நயமான வரிகளில் பாடலை எழுதியிருப்பார். ஸ்லீப்வெல் நிறுவனம் விளம்பர நோக்குடன் பாடலின் கருத்தை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்கள் கவிஞரின் தீவிர ரசிகர்களான கவிஞர் புவியரசு மற்றும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா.

இரண்டு முறை சாகித்ய அகாதெமி விருது வாங்கிய கவிஞர் புவியரசு கூறுகையில், ‘கவிஞரின் இந்த அற்புதமான வரிகளும் பாடகி சுசீலாவின் இனிமையான குரலும் அவர்களை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. அத்தகைய பாடல் வரிகளை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்தி இழிவுபடுத்துவது நியாயமற்ற செயல் என்றார். தமிழ் கலைக் களஞ்சியத்தின் உதவி ஆசிரியர் பேராசிரியர் கே.சுப்ரமணியன் மற்றும் திரை விமர்சகர், திரைச்சீலை புத்தகத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ள ஜீவானந்தம் ஆகியோரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கவிஞரின் புத்தகங்களை வெளியிடும் அவரது மகன் ஸ்லீப்வெல் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் உடனடியாக இந்த விளம்பரம் ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறினார்.

ஷீலா ஃபோம் நிறுவன (ஸ்லீப்வெல் மெத்தை தயாரிப்பாளர்கள்) உயர் அதிகாரி பிரின்ஸ் குரேஜா கூறுகையில், ‘இந்தப் பாடல் வரிகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது என்பதைத் தெரிந்து அது வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும் என்று தான் நாங்கள் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தினோம், மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை என்றார். ஆனால் நிருபரின் அடுத்தடுத்த கேள்விகளுக்குபதில் அளிக்க முடியாமல் அதை மெயில் அனுப்பச் சொல்லிவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024