Tuesday, June 16, 2015

விபத்தில்லா பயணத்துக்கு...

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்குத் தலைக்கவசம் அணியாதது என்பது முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதால், தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் 2001-இல் 3 கோடியே 85,50,026 இரு சக்கர வாகனங்கள் இருந்ததாம். 2012-இல் அதன் எண்ணிக்கை 11 கோடியே 54,19,175-ஆக உயர்ந்ததாம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதலாக 8 கோடி இரு சக்கர வாகனங்கள் பயணிப்பதற்கு உகந்தவாறு சாலைகள் உள்ளனவா?
தமிழகத்தைப் பொருத்தவரை, 2014 மார்ச் நிலவரப்படி 1 கோடியே 88 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் 1 கோடியே 55 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகும். அதாவது, இரு சக்கர வாகனங்கள் தவிர்த்து இதர வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 33 லட்சம்தான்.
இந்த 33 லட்சம் வாகனங்கள் பயணிப்பதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாற்கரச் சாலை, ஆறுகரச் சாலை, தங்கச் சாலை என்று செலவிடும் அரசு, இரு சக்கர வாகனங்களின் வழித்தடங்கள் குறித்து ஏதாவது விசேஷ கவனம் செலுத்தியதா என்பது தெரியவில்லை.
பெருவழிச் சாலைகளை விட்டு நீங்கி நகருக்குள் வந்துவிட்டால் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னலிலும் இரு சக்கர வாகனத்தைத் தவிர்த்து பிற வாகனக்காரர்கள் எல்லாம் அவரவர் வழியில் பிரிந்து செல்வதற்காக சாலை முழுவதையும் அடைத்ததுபோல் நின்றுகொண்டு அவர் அவருக்கான சிக்னல் கிடைத்ததும் சீறிப் பாய்ந்து செல்வதற்கு இடையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வேண்டாத, அழையாத விருந்தாளியைப்போல் "ஆடி', "ஹூண்டாய்', "டொயட்டோ', "பென்ஸ்'க்களுக்கு இடையில் வளைந்தும், நெளிந்தும், கூனியும், குறுகியும் செல்ல வேண்டியிருக்கிறது.
இரு சக்கர வாகனம் என்பது அதை ஓட்டுபவரின் தலைக்கவசத்தையும் சேர்த்துதான் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதை யார் தடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.
இரு சக்கர வாகனத்தைத் தயாரிப்பவர்கள், பின்னால் வரும் பிற வாகனங்கள் தெரிவதற்காகக் கண்ணாடிகள், ஒலிப்பான்கள் வைத்திருக்கிறார்கள். இதேபோல, அவர்கள் வாகன ஓட்டியின் உயிரைக் காக்கும் தலைக்கவசத்தை வண்டியுடன் சேர்த்து விற்பதை அரசு கட்டாயமாக்கலாமே!
மேலும், வாகன சக்கரத்தில் சேலை மாட்டிக் கொள்ளாமல் இருக்க "சாரி கார்டு' வைப்பதுபோல், இரண்டு தலைக்கவசங்கள் வைப்பதற்கும் வாகனத்தில் இடம் வைத்திருக்க வேண்டும்.
வாகனப் பதிவுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும்போது, வண்டியுடன் வாங்கிய தலைக்கவசம் மட்டுமல்லாமல், பின் இருக்கையில் அமருபவர்க்காக கூடுதலாக ஒரு தலைக்கவசமும் வாங்கிய ரசீதுடன் சமர்ப்பித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
இது எல்லாமே சரிதான். ஆனால், எந்த மனிதனையும் எந்தச் சட்டமும் இயற்கைக்கு மாறாக வாழும்படி நிர்பந்தித்தால் அந்தச் சட்டம் தோற்றுவிடும்.
குளிர்ப் பிரதேசங்களான மேல்நாட்டவர்களைப் போல் அல்லாமல் நம் நாட்டவர்களுக்குத் "தலைநீர்' என்பது இருக்கிறது. இது அடிக்கடி இறங்கி தொண்டைக்கட்டு, தலைவலி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை உண்டுபண்ணும். தீராத இருமலையும், கபத்தையும் உண்டுபண்ணும்.
வெயில் அடிக்கும் வேளையில், ஒருநாளில் 4 அல்லது 5 மணி நேரம் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தனது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்ட ஒருவர் தலைக்கவசம் அணிந்து 3 நாள்கள் கடும் வெயிலில் பயணித்தால் அவருக்கு பலவிதமான உடல் உபாதைகள் வந்துவிடும். தலைக்கவசம் அணியாதவர்களைத் தண்டிக்கும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் இதுதான் நிலைமை. இதுபோன்ற தொல்லை ஏற்படாமல் நம்மை நாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பெருவழிச் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு இரண்டு தடங்கள், மகிழுந்து எனப்படும் கார்களுக்கு இரண்டு தடங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டு தடங்கள் வீதம் வருவதற்கும், செல்வதற்கும் ஏற்படுத்த வேண்டும்.
நகரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு என இரண்டு வழித்தடங்கள் வருவதற்கும், செல்வதற்கும் என்பதோடு போக்குவரத்து சிக்னலில் இரு சக்கர வாகனங்களுக்குத் தனி வரிசையையும் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை சட்டம் இயற்றுவதன் மூலம் தொடங்காமல் டாஸ்மாக்கை போல் அரசின் கொள்கை முடிவாக அறிவித்துத் தொடங்க வேண்டும். அப்படியானால்தான், யாரும் நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுவிட முடியாது.
இந்தியாவில் ஓராண்டில் சாலை விபத்துகளால் இழப்பீடு போன்ற பல வகைகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் காப்பீட்டுக் கழகங்கள் வழங்குகின்றன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பொதுமக்களாகிய நாமும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு எந்த விபத்தையும் ஏற்படுத்த மாட்டோம் என்றும், அப்படியே எதிர்பாராத விபத்து நடந்துவிட்டாலும் இழப்பீடு கேட்க மாட்டோம் என்றும் உறுதி ஏற்போம்.
இதன் மூலம், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு மீதமாகும் 5 லட்சம் கோடி ரூபாயைக் கொண்டு பாதுகாப்பான சாலை, போக்குவரத்து அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட வாகனங்கள் 10 - 15 ஆண்டுகள் விபத்தே உண்டாக்காமல் இயக்கப்பட்டால், கட்டிய காப்பீட்டுத் தொகையை காப்பீட்டுக் கழகங்கள் திருப்பி அளிக்க வேண்டும். இதனால், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவதில் கவனம் கூடும். தரமான சாலை, தலைக்கவசம் அணிதல், வாகனம் ஓட்டுபவரின் விழிப்புணர்வு போன்ற பல செயல்களின் மூலம் விபத்தில்லா சமூகத்தை உருவாக்குவோம்.

கட்டுரையாளர்:
பொறியாளர் (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024