Wednesday, June 17, 2015

ரெயில்வேயில் சீர்திருத்தம்

மக்களுடைய போக்குவரத்தின் முதுகெலும்பாக திகழ்வது ரெயில்வேதான். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் 12,617 பயணிகள் ரெயில்களும், 7,421 சரக்கு ரெயில்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. 7,172 ரெயில் நிலையங்கள் மூலம், 2 கோடியே 30 லட்சம் மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள மொத்த ரெயில்பாதையின் நீளம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கிலோ மீட்டராகும். 13 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரெயில்வேத்துறை எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காணவில்லை. இவ்வளவுக்கும் பொதுபட்ஜெட்தவிர, பாராளுமன்றத்தில் ரெயில்வேக்கு மட்டும் என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சுதந்திரம் அடைந்த ஆரம்பகாலங்களில் இந்திய ரெயில்வே ஒரு ரோல்மாடலாகவே இருந்தது. 1956–ம் ஆண்டு பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு வந்த சீன பிரதமர் சூ என் லாய், இது ஒரு நவீனமான ரெயில்பெட்டி தொழிற்சாலை, சீனர்கள் இங்கு வந்து அறிந்துகொள்வது மிகவும் தகுதியானது. கிழக்கத்திய நாடுகளெல்லாம் இந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை குறித்து பெருமைகொள்ளவேண்டும் என்று எழுதிவைத்தது, இன்றும் அழியாத சாட்சியாக இருக்கிறது.

ஆனால், இன்று இந்திய ரெயில்வே, சீனாவைவிட மிகவும் பின்தங்கிவிட்டது. பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய ரெயில்வேயை சீர்திருத்தவும், வருமானத்தைப்பெருக்கவும் ரெயில்வேயை சரியான பாதையில் கொண்டுசெல்லவும் ஏற்ற வழிவகைகளை ஆராய்ந்து அறிக்கை தர, நிதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசாங்கம் நியமித்து, அந்த கமிட்டியும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போதைய நிலையில், ரெயில்வேயில் ஒரு ரூபாய் வருமானம் வந்தால், அதில் 94 காசுகள் ஊழியர்கள் சம்பளம், பென்ஷன், இயக்க செலவு போன்ற நிர்வாக செலவுகளுக்கே போய்விடும் நிலையில், இந்த அறிக்கையில் வருவாயை பெருக்கும், நிர்வாகத்தை சீர்திருத்தும் பல பரிந்துரைகள் உள்ளன. ரெயில்வேயை முழுக்க முழுக்க தனியார் மயமாக்காவிட்டாலும், அதற்கு முன்னோடியாக வாசலைத் திறந்துவைக்கும் வகையில், பாசஞ்சர் ரெயில்களை தனியார் ஓட்டும் பரிந்துரை இருக்கிறது. புறநகர்களில் ஓடும் மின்சார ரெயில்களை ரெயில்வே நிர்வாகமும், மாநில அரசும் இணைந்து நடத்தவும், எந்த திட்டம் என்றாலும் வணிகரீதியான பொறுப்பேற்பது, நிர்வாகத்தில் அதிகாரப்பகிர்வு, எல்லாவற்றையும் மேற்பார்வையிட ஒரு சுயேச்சையான ஒழுங்குமுறை அமைப்பு, ரெயில்வே நிர்வாகம் தன் முக்கிய பணியைவிட்டுவிட்டு, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள், உணவு வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை கைவிடுதல், பாதுகாப்பு பணியை ரெயில்வே பாதுகாப்பு படையில் இருந்து மாநில ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தல் போன்ற பல பரிந்துரைகளை செய்துள்ளது.

வருமானத்தைப்பெருக்க பல பரிந்துரைகளை செய்த இந்த கமிட்டி, ரெயில்களில் பெரும்பாலும் இலவச பாஸ்கள், சலுகை கட்டணத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க எந்த வழியையும் சொல்லவில்லை. ரெயில் நிர்வாகத்தில் இழப்பு என்றால் அது மக்களின் வரிப்பணம்தான். தனியார் பங்களிப்போடு வருவாய் ஈட்டுவதில் தவறு எதுவும் இல்லை. அந்த முயற்சியையும் செய்துபார்ப்பதில் தவறேயில்லை. பாலும் தண்ணீரும் கலந்து இருந்தால், அன்னப்பறவை அதில் பாலை மட்டும் தனியாக பிரித்து குடிக்கும் என்பதுபோல, ரெயில்வே நிர்வாகத்தை சீரமைக்க உடனடியாக மத்திய அரசாங்கம் இந்த கமிட்டியின் பரிந்துரைகளில் சாத்தியமானவற்றையெல்லாம் ஏற்று நடைமுறைக்கு கொண்டுவந்து ரெயில்வே நிர்வாகத்தை வேகப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024