Tuesday, June 9, 2015

தேவை புதிய இணைய தளம்

போலிச் சான்றிதழ்களைக் கண்டறிய புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டியது தற்போதைய காலத்துக்கு மிகவும் அவசியமாகிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் அனைத்து இடங்களிலும் போலிகள் இடம்பிடித்து விடுகின்றன. அன்றாடத் தேவைக்கான பொருள்கள், கல்வித் துறை, அரசுத் துறைகள் வழங்கும் சான்றிதழ்கள் என அனைத்திலும் போலிகள் உள்ளன. போலிச் சான்றிதழ் தயாரித்தவர் கைது என்ற செய்திகளை நாளிதழ்களில் அடிக்கடி நாம் படிக்கிறோம்.
கல்வித் துறை, பல்கலைக்கழகங்கள், வருவாய்த் துறை சான்றிதழ்கள், அரசுத் துறைகளின் பணி நியமன ஆணைகள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவை போலியாகத் தயாரித்து வழங்கப்படுகின்றன. இது வேண்டுமென்றே முறைகேட்டில் ஈடுபடுவதாகும்.
சிலர் இடைத்தரகர்களை நம்பி போலிச் சான்றிதழ்களை பெற்று ஏமாறுகின்றனர். அவ்வாறு ஏமாறுகிறவர்களுக்கு அது போலி என்பது தெரியாது. மோசடியாகப் பிறரால் ஏமாற்றப்படுபவர்கள் தேவையில்லாமல் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
அரசு, தனியார் துறை பணியில் சேருவதற்கும், உயர் கல்வி கற்பதற்காகவும், சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவதற்காக தனது பெயருக்குப் பின்னால் கல்வித் தகுதியை போட்டுக் கொள்வதற்காகவும் போலி கல்விச் சான்றிதழ்களை சிலர் தெரிந்தே பெறுகின்றனர்.

வருவாய்த் துறை சான்றிதழைப் போலியாகத் தயாரித்து நில மோசடியில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.

பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய அச்சான்றிதழ், உரிய கட்டணத்துக்கான காசோலையுடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த வகையில், சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய 20 நாள்கள் வரை ஆகிறது.
அதேபோல, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்திடமிருந்து அறிய வேண்டும்.
உதாரணமாக, ஓர் அரசு அல்லது தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்படும்போது, அவரது 10, 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பித்து அரசு தேர்வுத் துறை மண்டல அலுவலகத்துக்கு அனுப்புகின்றனர். 

அரசு தேர்வுத் துறை மண்டல அலுவலகப் பணியாளர்கள் அதனை அரசு தேர்வுத் துறை இயக்ககத்துக்கு நேரடியாக எடுத்துச் சென்று அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து மாவட்டக் கல்வி அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்புகின்றனர். 

10, 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு நடைமுறைகள் இருப்பதால், சுமார் 2 மாதங்களுக்கும் மேலாகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. 

அரசின் சலுகைகளைப் பெற வருமானச் சான்று, ஜாதிச் சான்றுகள் போலியாக தயாரிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில், அசையாச் சொத்தை விற்பனை செய்ய சொத்தின் உரிமையாளருடைய வாரிசுச் சான்றையும் போலியாகத் தயாரித்து நில மோசடியில் ஈடுபடுகின்றனர்.

சில ஜாதிப் பிரிவுகளுக்கு பல்வேறு சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் அரசு வழங்குவதால் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கட்டாயமாக அறியப்படுகிறது. கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதால் மருத்துவப் படிப்பில் சேரும் தலித் பிரிவு மாணவர்களின் ஜாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மை அறியப்படுகிறது.
மருத்துவக் கல்வி நிலையங்கள் சம்பந்தப்பட்ட மாணவரின் ஜாதிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி அந்த ஜாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்கின்றனர். அதற்கு குறைந்தபட்சம் சுமார் 10 நாள்களாகிறது. 

உண்மைத் தன்மையை அறிவதற்கான கால தாமதத்தைத் தவிர்க்க தனி இணையதளத்தை உருவாக்க வேண்டியது அல்லது ஏற்கெனவே அரசுத் துறைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே உள்ள இணைய தளத்திலேயே சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கென்று தனிப் பக்கத்தை உருவாக்க வேண்டியது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.
சம்பந்தப்பட்ட துறை வழங்கும் சான்றிதழ்கள் அத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
உண்மைத் தன்மை அறியும் இணையப் பக்கத்தில் சான்றிதழின் எண்ணை சமர்ப்பித்து அதன் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட துறையினர் தங்கள் அலுவலகத்திலிருந்தே உடனடியாகத் தெரிந்து கொள்ள வழிவகை செய்தால் கால தாமதத்தைத் தவிர்க்கலாம். மோசடியையும் தடுக்கலாம்.
பொதுமக்களும் தங்களுடைய சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியவும், சங்கேத கடவுச் சொல் இல்லாமல் அதனைப் பயன்படுத்தும் வகையில் இணையம் வடிவமைக்கப்பட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் இ-சேவை மையம் உருவாக்கப்பட்டு சான்றிதழ்கள் இணையம் மூலம் வழங்கப்படுவதால் அதிலும் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய தனிப் பக்கத்தை உருவாக்குவது கடினமாக இருக்காது.
இணைய வழியிலேயே சான்றிதழ்கள் இருப்பதால் அதனை உடனடியாக சரிபார்த்து விடலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் போலிச் சான்றிதழ்களை தயாரிப்பவர்கள் அதையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.
  அதனால் அது அசலா, போலியா என்பதை அறிய முடியாது. அதனால், உருவாக்கப்படும் இணையதளம் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். 
அரசுத் துறை இணையதளங்களை நிக் எனப்படும் நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் வடிவமைத்துப் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான முயற்சி மேற்கொண்டு அரசுத் துறைகளின் இணையதளங்களில் அதற்கான பக்கத்தை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024