Tuesday, June 9, 2015

உண்ட வயிற்றுக்கு இரண்டகம்...

நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விவகாரம் ஓர் எரிமலையைப்போல வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இரண்டே நிமிடங்களில் வேகவைத்து உண்ணக் கூடிய அந்தப் பொட்டல உணவில், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிற நச்சுக் கூறுகள் மிகுந்திருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் அதற்குத் தடை விதித்துள்ளன.
மேகி நூடுல்ஸின் பெரும்பான்மை நுகர்வோர்களாக விளங்கிய குழந்தைகளே அதைத் தெருவில் போட்டுத் தீயில் எரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, சர்வரோக நிவாரணியாகத் தூக்கிப் பிடிக்கப்பட்ட ஒரு துரித உணவு, அடுப்பின்றியும் பாத்திரமின்றியும் இப்போது நடுத் தெருவில் வெந்து கொண்டிருக்கிறது.
ஒரு நச்சு உணவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இத்தகைய நடவடிக்கைகளை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டின் பெருநகரங்களில் பெருமளவில் விற்பனையாகிவரும் பல்வேறு வகையான கேடான உணவுகள் (ஜங்க் புட்ஸ்), நொறுக்குத் தீனி வகைகளை இன்னும் தீவிரமாகவும் துல்லியமாகவும் ஆய்வு செய்தால் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியப் பெருநகரங்களில் வாழும் நடுத்தட்டு மக்களின் பரபரப்பான வாழ்க்கை முறையையும் சற்று மேம்பட்ட அவர்களது பொருளாதார நிலையையும் ஆய்ந்துணர்ந்து சில வணிக நிறுவனங்கள், மிகவும் குறிப்பாக உணவு வணிக நிறுவனங்கள், ஒரு புதிய உணவுக் கலாசாரத்தைத் தோற்றுவித்து அந்தக் கலாசாரத்தை விளம்பரங்களால் வளர்த்தெடுத்து வீழ்த்த முடியாதவொரு பெருவணிக வெற்றியை அடைந்துள்ளன.
காற்றுப் புகாத ஈயக் காகிதப் பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்குத் தொங்குகிற துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளில் புதைந்திருக்கும் நலக்கேடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
என்றாலும் கூட, அத்தகைய எச்சரிக்கைகளை நமது துரித உணவுப் பிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை. இன்றைய நிலையில் அத்தகைய உணவுகள் அவற்றை உண்போரின் உடலைக் கெடுக்கின்றன, அவை அடைக்கப்பட்டிருந்த நெகிழிக் காகிதங்கள் ஆங்காங்கே வீசப்பட்டு ஊரைக் கெடுக்கின்றன.
நமது மக்களின் புதிய உணவுக் கலாசாரம் என்பது மிகவும் வினோதமானது. இந்தக் கலாசாரத்தில், உணவு வகைகளை உடனடியாக வாங்கியோ அல்லது இரண்டே நிமிடங்களில் வேக வைத்தோ தின்றுவிட வேண்டும். வீட்டில் சமைப்பதை கெüரவக் குறைவாகவோ, அலுப்பூட்டுகிற அல்லது அவஸ்தைமிக்க ஒரு வேலையாகவோ கருத வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக உணவு வகைகள் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு முதலில் விழிகளுக்கு விருந்து படைப்பவையாக இருக்க வேண்டும்.
புதிய உணவுக் கலாசாரத்தில் வண்ண வண்ண உணவுகளுக்கே சிறப்பிடம், முதலிடம். இரண்டு இட்லிகளுக்கு நான்கு வகை சட்னி என்பதை நிரூபணம் செய்ய அந்தச் சட்னிகளில் சேர்க்கப்படுகிற நிறமிகள் குறித்தும், அத்தகைய நிறமிகளின் நச்சு விளைவுகள் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை.
உணவுப் பொருள்களின் இயற்கையான சுவை அவற்றின் உண்மையான நிறம், தயாரிப்புத் தரம், சத்துக்கூறுகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வண்ணமயமான உணவுகளே நல்ல உணவுகள் எனும் பொதுக் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
உடலுக்கு வெளியே நாம் அணிகின்ற உடைகள், காலணிகள், நகைகள் போன்றவை குறித்து நிறைய ஐயங்களை எழுப்பி அவற்றை ஆய்வு செய்துப் பார்த்து வாங்கி வருகிற நமது மக்கள், உடலுக்கு உள்ளே சென்று தங்களை உயிர்வாழ வைக்கின்ற உணவுகளைக் குறித்து எத்தகைய ஆய்வையும் மேற்கொள்வதில்லை.
உணவு விடுதிகளில் அமர்ந்து நேரடியாகவும், கடைகளில் வாங்கி வந்து சமைத்தும் உண்கிற பல்வேறு வகையான உணவுகள், உணவுப் பொருள்களைப் பற்றிய மக்களின் அறியாமையே நமது நாட்டில் நச்சு உணவு வணிகர்கள் உருவாகி வளர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.
இன்றைய நமது உணவு தானியங்கள், காய் கனிகள், கீரை வகைகள் அனைத்தும் உயிர்க்கொல்லி ரசாயனங்களை உறிஞ்சிக் கொண்டு உற்பத்தியாகின்றன. இது நமது உணவுப் பொருள்களுக்கு நேருகின்ற முதல் கட்டத் துயரம். பிறகு அவற்றைப் பாதுகாக்கவும் பளபளப்பாக்கவும் பயன்படுத்தப்படுகிற ரசாயனங்கள் இரண்டாம் துயரம்.
அடுத்ததாக அவற்றில் அதனதன் பொருத்தத்துக்கு ஏற்ப கொடூரமான பேராசையில் கலப்படங்கள் செய்து சந்தையில் இறக்குவது மூன்றாம் துயரம். அதற்கடுத்ததாகச் சமைப்பதன் பொருட்டும், சமைத்ததைப் பளபளப்பாக்கும் பொருட்டும் சேர்க்கப்படுகிற நிறமிகளும், வேதிப் பொருள்களும் நான்காம் துயரம். ஆக, நமது உணவு வகைகளில் மிகப் பெரும்பாலானவை நான்கு கட்டங்களாகப் பிரித்து நஞ்சேற்றம் செய்யப்பட்டவையாக இருக்கின்றன.
இவை போதாதென்று மரபணு மாற்ற அறிவியலால் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சந்தைகளில் மின்னுகிற காய் கனிகள், நோய்க் கனிகள் பற்றிய எச்சரிக்கைகள் கூடுதல் துயரமாகி இன்னொரு பக்கத்தில் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.
பழ வகைகளுக்கு இழைக்கப்படும் இரண்டகங்கள் இன்னும் மோசமானவை. பழங்கள் நமது பசிக்கும், உடல் நலனுக்கும், சுவையுணர்வுக்கும் இயற்கை நேரடியாகத் தருகிற பரிசுகளாகும். குழந்தைகள், தாய்மையடைந்துள்ள பெண்கள், நோயாளிகள் ஆகியோருக்குப் பழங்களும், அவற்றின் சாறுகளுமே பரிந்துரை செய்யப்படுகின்றன.
ஆனால், அவற்றைப் பாதுகாத்து வைத்து விற்பனை செய்யும் பொருட்டு அவற்றின் மீது தெளிக்கப்படுகிற ரசாயனங்களால் அவை வார, மாதக் கணக்கில் சாம்பல் பூத்த நிலையில் கெடாமல் இருப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அடையாள வில்லை ஒட்டப்பட்டு பளபளப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் விற்பனையாகிற ஆப்பிள்களை வாங்கிச் சுரண்டினால் கணிசமான அளவில் வெண்ணிற மெழுகு வருகிறது. அந்த மெழுகைக் குவித்து வைத்துக் கொளுத்தினால் சுடர்விட்டு நின்று எரிகிறது.
இந்த விவகாரம் பிரச்னையாக மாறியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் மெழுகு பூசப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என உணவுத் தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்தனர். ஓர் அபாயத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ன வேண்டிக் கிடக்கிறது என்று தெரியவில்லை.
கண்களுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற இன்றைய பழ வகைகளில் பெரும்பாலானவை ரசாயன ஆடை பூண்டவை. இயற்கைக்கு எதிரான வகையில் வன்முறையில் பழுக்க வைக்கப்பட்டவை. ரசாயனக் கலவைகளில் முக்கி எடுக்கப்பட்டவை அல்லது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டவை.
அவற்றை நாம் உப்பு நீரில் நன்றாக ஊற வைத்துப் பல முறை கழுவியும், அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப தோல் சீவியும் உட்கொள்ள வேண்டியிருக்கிறது.
எத்தகைய உணவுப் பொருளையும் கெடாமல் பாதுகாத்து வைத்திருந்து விற்பனை செய்வது, நுகர்வோருக்கு அவற்றை மிகக் கவர்ச்சியாகக் காட்டுவது, வலிய வலிய அவற்றுக்குச் சுவை சேர்ப்பது என்கின்ற மூன்று நிலைகளால்தான் அவை ரசாயனமயமாக மாறுகின்றன.
தேநீர்க் கடைக்காரர்களுக்குத் தேயிலைத் தூள் தனியாகவும் அதில் கலக்க சாயம் தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தேநீர் கலப்படக் கலாசாரத்தைக் கண்டறிந்து அதிர்ந்துபோன இந்தியத் தேயிலை வாரியம், தேயிலைத் தூள் விற்பனையாளர்கள், தேநீர்க் கடைக்காரர்களை மிகக் கடுமையாக எச்சரித்தும், உண்மையான தேயிலைத் தூளின் தரம் பற்றி விளக்கியும் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்த வேதனையும் அரங்கேறியது.
ஆடுகளை அதிக எடையுள்ளதாகவும், கொழு கொழுவென இருப்பதாகவும் காட்டி விற்பனை செய்ய நினைப்பவர்கள், குழாய்களின் வாயிலாக வன்முறை வழியில் அவற்றுக்கு வலிய வலிய வயிறு புடைக்கத் தண்ணீர் புகட்டி சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். வணிக வெறி என்பது எதற்கும் துணிந்த ஒன்று என்பதற்கு இதுவே சான்றாகும்.
மனிதர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு வேளை உணவு உண்டு உயிர் வாழ்ந்தாக வேண்டிய உயிரியல் உண்மையே சில உணவு வணிகர்களுக்கு கொண்டாட்டமாக ஆகியுள்ளது.
எனவே, அவர்கள் தங்களுக்கு வசதியான, மிகை வருவாய் தரக்கூடிய, குழந்தைகள் உள்படக் கவர்ச்சிக்கு மயங்குவோரைக் குறிவைத்து உணவு வகைகளைத் தயாரித்து அவற்றை இமயமலை உயரத்துக்குத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
பல்கிப் பெருகியிருக்கும் காட்சி ஊடகங்கள் விளம்பரம் என்கின்ற வகையில் அவற்றைப் பெருமளவில் பரப்புகின்றன. ஆக, இன்றைய நமது நடுத்தரக் குடும்பத்தினர் உண்ண வேண்டிய உணவுகளைப் பெரும்பாலும் ஊடகங்களே தீர்மானிக்கின்றன.
இந்நிலையில், இந்தக் கலப்புகள் குறித்து விழிப்புடன் இருந்து நுட்பமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உணவுத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள்தான்.
அதற்கடுத்து விழிப்புடன் இருந்து கொள்வன கொண்டு தள்ளுவதைத் தள்ள வேண்டியவர்கள் நுகர்வோர்களான மக்களேயாவர். ஆனால், மக்களோ தொலைக்காட்சி மோகத்தில் சிக்கி இது குறித்து கவலை கொள்ளாதவர்களாகவே உள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில், ஆறுதல் தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் கொஞ்சம் சிந்திக்கிற மக்கள், இயற்கை உரங்களிலேயே விளைந்த மரபார்ந்த நமது இயற்கை உணவுகளின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்பதுதான். இன்றைக்கு கேழ்வரகு, சாமை, தினை, வரகு, பனைப் பொருள்கள், கீரை வகைகள், காய்கனிகள் போன்றவற்றின் மீது மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயற்கை உணவு வணிகம் வருவாய் காண்கிறது எனும் குற்றச்சாட்டு எழுத்தாலும்கூட, இயற்கை வழி உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் விலையும் குறைந்து விடும் என்கிறார்கள் இயற்கை உணவு விற்பனையாளர்கள்.
இனி வேறு வழியில்லை. இயற்கைக்கே திரும்பியாக வேண்டும் இவ்வுலகம்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...