இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சிங்கப்பூர் திரும்ப பெற்றுள்ளது.
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸ் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் அரசும் அந்நாட்டு இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, சிங்கப்பூர் கடைகளில் இருந்து மேகி நூடுல்ஸ் அகற்றப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நுடுல்சுகளில் உடல் நலத்துக்கு கேடான எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதனால் விற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அந்நாட்டு வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையம் (AVA), தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸுகளை ஆய்வுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையம், ஆய்வு முடிவு வரும் வரை நூடுல்ஸ்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த சோதனை முடிவில் மேகி நூடுல்ஸில் உண்பதற்கு ஆபத்தான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொண்டுள்ளது என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment