Wednesday, June 10, 2015

ஹெல்மெட்’ தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்

1963–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த ‘தர்மம் தலைகாக்கும்’ என்ற திரைப்படத்தில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலைப் பாடுவதுபோல, ஒரு காட்சி வரும். ஆனால், இப்போது பெருகிவரும் விபத்துக்கள் அதிலும் குறிப்பாக ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும், அவர்கள் மரணத்தால் அவர்களின் குடும்பமே நிர்க்கதியாகி நிற்பதையும் பார்க்கும்போது, இந்த பாடலை ‘ஹெல்மெட்’ ‘தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்று கூறுவதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

சாலைப்பாதுகாப்புக்காக ஒரு கடுமையான சட்டம்வேண்டும் என்று இந்தியா முழுவதுமே கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும் மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று ஒருவாரத்தில் கோபிநாத் முண்டே என்ற மந்திரி தலைநகராம் டெல்லியிலேயே கார் விபத்தில் இறந்ததால், இந்த அரசாங்கம் சாலைப்போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்புக்கரம்கொண்டு ஒரு சட்டத்தைக் கொண்டுவரும், அந்த சட்டம் பெருமளவு விபத்துக்களை தவிர்க்கும் என்று எதிர்பார்த்தது இன்னும் நிறைவேறவில்லை. 1988–ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை வலுவுள்ளதாக ஆக்கும் வகையிலும், போக்குவரத்து குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையிலும், 2014–ம் ஆண்டு சாலைப்பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதா என்று ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. முண்டே இறந்து ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட திட்டமிட்ட இந்த மசோதா, பல காலக்கெடுக்களை கடந்தும் நிறைவேற்றப்படும் வழியை காணாமல் இருக்கிறது. அதன்பிறகு, 4 முறை பல திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த மசோதாவின் நோக்கமே இப்போது நீர்த்துப்போய்விட்டது.

ஆனால், பாராளுமன்றத்தால் முடியாத இந்த நோக்கத்தின் ஒரு பகுதியை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று பிறப்பித்துள்ள தீர்ப்பு மூலம் நிறைவேற்றிவிட்டார். மத்திய அரசாங்கமும், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வதை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 2006–2007–ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 3 ஆயிரத்து 426 ஆகும். ஆனால், 2013–2014–ல் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு நிச்சயமாக இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சத்தை தாண்டி வேகமாக சென்றிருக்கும். இதுபோல, 2005–ம் ஆண்டு இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,670 பேர் என்று இருந்தநிலை மாறி, 2014–ல் 6,419 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆக, இனியும் தாமதம் இல்லாமல், இது நீதிபதியின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் வந்தாலும், மத்திய சட்டத்தின் தாமதத்தையும், உயிர்காக்கும் தீர்ப்பு இது என்ற வகையிலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். நீதிபதி என்.கிருபாகரன் வழியை திறந்துவிட்டார். அதன் வழியே செல்வது மத்திய, மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024