உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே?
டி.எல்.சஞ்சீவிகுமார்
உங்கள் அதிகாரத்தைத் தெரிந்துக்கொண்டீர்கள். சரி, என்றைக்காவது அதனைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? உங்கள் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒருமுறையேனும் கலந்து கொண்டிருக்கிறீர்களா? அங்கே மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப் பியிருக்கிறீர்களா? ‘இல்லை’ என்பவர் கள் இனியாவது அதை செய்யுங்கள். “அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத் தும்போது மக்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதற்கான தகுதியைப் பெறுவதே உண்மையான சுயாட்சி” என்றார் மகாத்மா காந்தி.
காந்தி இதனைச் சொன்ன காலகட்டத்தில் அதிகார வர்க்கத்துக்கு பத்து, இருபது தலைகளே இருந்தன. இன்று கூரிய கொம்புகளுடன் ஆயிரம் தலைகள் முளைத்துவிட்டன. இந்தச் சூழலில் அதிகார வர்க்கம் தவறு இழைக்கும்போது எதிர்ப்பது அவரவர் முடிவு. அனைவரும் சசி பெருமாள் ஆக முடியாதுதான்; அனைவரும் டிராஃபிக் ராமசாமி ஆக முடியாதுதான். ஆனால், அனைவரும் கேள்வி எழுப்பலாம், இல்லையா?
நாட்டுக்காக வேண்டாம். குறைந் தது, உங்கள் வீட்டுக்காகக் கேள்வி கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை யா? கேள்வி கேளுங்கள். மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லையா? கேள்வி கேளுங்கள். உங்கள் குழந்தை படிக்க அரசுப் பள்ளி இல்லையா? கேள்வி கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு முன் பாக சாக்கடை அடைத்துக்கொண் டுள்ளதா? கேள்வி கேளுங்கள். குப்பை அள்ள ஆள் வரவில்லையா? கேள்வி கேளுங்கள். அருகில் இருக்கும் மதுக்கடை அச்சுறுத்தலாக இருக் கிறதா? கேள்வி கேளுங்கள். கேட்பதில் என்ன தயக்க வேண்டிக்கிடக்கிறது?
உலகம் உயிர்ப்புடன் இருக்கிற தென்றால் காரணம் கேள்விகளே. கேள்விகளுக்கு உயிர் உண்டு. கேள்விகள் தனித்து பிறப்பதில்லை. அவை துணைக் கேள்விகளுடனே பிறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு கேள்வியும் நிறைய குட்டிகளைப் போடுகின்றன. முடிவுறாத கேள்வி களின் இயக்கமே உலகத்தின் இயக் கம். கேள்விகளால் உருவானதுதான் மனித சமூகத்தின் வளர்ச்சி. கேள்விகள் எழுப்பாத சமூகம் பகுத்தறிவற்ற சமூகம். அது தேங்கிவிடும்.
நீங்கள் எழுப்பும் தனிநபர் கேள்வியே சமூகத்தின் கேள்விகளா கின்றன. சமூகங்களின் கேள்விகளே கிராமத்தின் கேள்விகளாகின்றன. கிராமங்களின் கேள்விகளே நகரங் களின் கேள்விகளாகின்றன. நகரங் களின் கேள்விகளே நம் தேசத்தின் கேள்விகளாகின்றன. தேசங்களின் கேள்விகளே சர்வதேசங்களையும் கட்டுப்படுத்துகின்றன. இங்கே கேட் காமல் எதுவும் கிடைக்காது. தட்டாமல் எதுவும் திறக்காது. பதில்கள் உடனே கிடைக்காது. ஆனால், கிடைக்காமலே போகாது.
இந்த இடத்தில், “எல்லாம் சரி, கிராம சபைக் கூட்டம் நடப்பதே எங்க ளுக்கு தெரிவதில்லையே...” என்கிற உங்கள் முணுமுணுப்பும் கேட்கிறது. அதையும் உங்கள் கேள்வியின் மூலமே முறியடிக்க இயலும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3(2)-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியும் ஆறு மாதங்களுக்குக் குறையாத இடைவெளியில் கிராம சபையைக் கூட்ட வேண்டியது கட்டாயம். மிக மிகக் கட்டாயமாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்பட வேண்டும்.
கிராம சபைக் கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாட்கள் முன்பு கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும். கூட்டம் நடத்தப்படும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப் படும் விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பஞ்சாயத்து அலுவல கம், பள்ளிகள், கோயில்கள், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சத்துணவு மையம், தொலைக்காட்சி அறை உள் ளிட்ட பொது இடங்களில் ஒட்ட வேண் டும். தண்டோரா அடித்து தகவல் சொல்ல வேண்டும். ஒலிப்பெருக்கியில் அறிவிக்க வேண்டும்.
வார்டு உறுப்பினர்கள் வீடுதோறும் சென்று மக்களை அழைக்க வேண் டும். ஒருவேளை உங்கள் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கிராம சபைக் கூட்டத்தை நடத்த மறுத்தால் துணைத் தலைவர் கூட்டம் கூட்ட வேண்டும். அவரும் மறுத்தால் உங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகார பூர்வமாக தகவல் சொல்லுங்கள். அவர் வந்து கிராம சபையைக் கூட்டுவார். கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் 72 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஜனவரி 26-ம் தேதியில் கூட்டப் படும் கூட்டத்தில் உங்கள் கிராமத்துக்கு என்னென்ன வளர்ச்சிப் பணிகள் வேண்டும் என்பது பட்டியலிடப்படும். ஊருக்கு என்ன வேண்டும் என்று நீங் கள் கேட்கலாம். திட்டகளுக்கான அடுத்த நிதியாண்டு திட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு திட்டத்தைச் சபை யில் வைத்து ஒப்புதல் பெறுவார்கள். அதனையும் பார்க்கலாம்.
மே 1-ல் கூட்டப்படும் கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியலை வாசித்து ஒப்புதல் பெற வேண்டும். அதில் போலிகள் சேர்க்கப்பட்டிருக் கலாம். உங்கள் பெயர் நீக்கப்பட்டிருக் கலாம். இவற்றை எல்லாம் நீங்கள் கலந்துக்கொள்வதின் மூலமே சரி செய்ய இயலும். தவிர, அன்றைய நாள் கூட்டத்தில்தான் அந்த வருடம் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.
ஆகஸ்ட் 15-ல் வறுமை ஒழிக்கும் புதுவாழ்வுத் திட்டம், தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் (தாய்), பசுமை வீடுகள் திட்டம், ஊரக குடியிருப்புத் திட்டம், மகளிர் திட்டம், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட அனைத்து துறைகளிலும் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
அப்படி யாரும் எடுத்துரைக்க வில்லை எனில் கேட்டுத் தெரிந்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. அக்டோபர் 2-ல் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசின் இதரத் துறைகள் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள் மீதான ஆய்வு நடக்கும். பஞ்சாயத்தின் முந்தைய ஆண்டு வரவு செலவு கணக்குகள் மீதான தணிக்கைக் குறிப்புகளை ஆய்வு செய்வார்கள். இவற்றிலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாகக் கேட்கலாம்.
இவற்றை எல்லாம் ஏன் கேட்க வேண்டும்? ஏனெனில் அந்தத் திட்டங் களுக்கான நிதி உங்கள் வரிப்பணத் தில் இருந்து வருகிறது. அதனாலேயே அவற்றை ஆய்வு செய்யும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் இத்தனை காலமாக கேள்வி கேட்காமல் இருந்த தின் விளைவு என்ன தெரியுமா? ஒவ் வோர் ஐந்தாண்டுத் திட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகள் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.5 அல்லது 6 கோடி வரை ஒதுக்குகிறது.
உங்களுக்காக அரசு ஒதுக்கும் இந்த நிதியின் ஒரு ரூபாயில் 0.14 பைசா மட்டுமே உங்களை வந்தடை கிறது. மீதமுள்ள 86 பைசா ஊழலிலும் நிர்வாகச் செலவுகளிலுமே கரைந்துப்போகிறது. இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய திட்டக்குழு ஆகிய அமைப்புகள் நடத்திய இருவேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை இது!
No comments:
Post a Comment