Saturday, October 1, 2016

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் சுதிர் குப்தா... யார் இவர்...?


vikatan.com

சுவாதி கொலை வழக்கில் போலீஸார் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர், கடந்த 18-ம் தேதி மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் தெரிவித்தனர். முதலில், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ‘இது போலீஸாரின் திட்டமிட்ட கொலை’ என்று கூறி பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தனர். அதுமட்டுமின்றி, ‘தமிழக அரசு சார்பில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றால்... உண்மை வெளியே வராது. எனவே, ராம்குமார் தரப்பில் ஒரு தனியார் மருத்துவர் இருக்க வேண்டும்’ என்று கோரினர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


நீதிமன்றத்தை நாடிய ராம்குமார் தரப்பு!

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர் ராம்குமார் தரப்பினர். இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘வேண்டும் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார். அதிலும் திருப்தி அடையாத ராம்குமார் தரப்பு, உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது, ‘இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை’ என்று அது தள்ளுபடி செய்தது. மேலும், தனியார் மருத்துவரை அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைச் சேர்த்து அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணி முதல் ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர்குப்தா குழுவுடன் தொடங்கியுள்ளது. இதில் பாலசுப்ரமணியம், செல்வகுமார் உள்பட 5 மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த சுதிர் குப்தா?

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய உள்ள குழுவில் இணைந்துள்ள சுதிர் குமார் குப்தா எய்மஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆவார். இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர் வழக்கில் சுனந்தா உடலை பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர் சுதிர் குப்தா, ‘சுனந்தாவின் கைகள் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக’ அஞ்சாமல் அறிக்கை கொடுத்து அதிரவைத்தார். சில மாதங்கள் கடந்த நிலையில், ‘சுனந்தாவின் மரணம் இயற்கையானது’ என அறிக்கை அளிக்குமாறு தமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சுதிர் குப்தா கூறினார். அதற்காக, ‘தம்மீது எய்ம்ஸ் மருத்துவமனை நடவடிக்கை எடுத்தால் அதைக் கண்டு தாம் அஞ்சப்போவது இல்லை’ என்றும் தெரிவித்தார். சுதிர் குப்தா சொன்ன அறிக்கையைத் தொடர்ந்தே இந்த வழக்கு சூடுபிடித்தது. பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் சுதிர் குப்தா நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தர்மபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த தர்மபுரி இளவரசன் பிரேதப் பரிசோதனையில் பிரச்னை எழுந்தபோது, உயர் நீதிமன்றம் நியமித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழுவிலும் சுதிர் குப்தா இருந்தார்.

‘‘சரவணன் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை!’’

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துவந்தார் திருப்பூர் மாணவரான சரவணன். அவர், கல்லூரியில் சேர்ந்து 10 நாட்களில் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சரவணன் உயிரிழப்பு தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த சுதிர் குப்தா தலைமையிலான மருத்துவர் குழு, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும். மருத்துவம் தெரிந்தவராலேயே இந்த ஊசியைச் செலுத்த முடியும்’’ என்று தெரிவித்திருந்தது.

ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவிலும் குப்தா இணைந்திருப்பது இந்த வழக்கில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஈடுபட்டுள்ள குப்தா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவக் குழுவினர் மற்றும் மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி ஆகியோர் ராம்குமார் பெற்றோரைப் பார்த்து, ‘‘எங்களுடைய பரிசோதனை நேர்மையாக இருக்கும்’’ என்று கூறியதாக ராம்குமார் ஆதரவாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

‘‘ராம்குமார் உடலில் காயங்கள் உள்ளன!’


’இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராயப்பேட்டையில் உள்ள ராம்குமாரின் உடலைப் போய் பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளித்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவை இன்றே வழங்க வேண்டும். ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது’’ என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால், மட்டுமே இந்த வழக்கின் அடுத்த நகர்வு என்ன என்பது தெரியவரும்.

- கே.புவனேஸ்வ
ரி

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024