Saturday, October 1, 2016

புதையல் ஆசை... நிர்வாண பூஜை..! திருச்சி திகில் கொலைகள்


திருச்சி மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி 8 பேரை கொலை செய்தவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண பூஜை நடத்தி தந்தை உள்பட 8 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த வேங்கூரைச் சேர்ந்தவர் தங்கதுரை. தி.மு.க பிரமுகர் ஒருவரின் உறவினர். இவர், கடந்த 7ம் தேதி மாயமானார். இவரது உடல் நிர்வாண நிலையில் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்காலில் கிடந்தது. அவரது மரணம் தொடர்பாக திருவெறும்பூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது தங்கதுரையின் நண்பர் சப்பாணியிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையின் போது சப்பாணி, தங்கதுரையை மட்டுமல்லாமல் தன்னுடைய தந்தை உள்பட 8 பேரை கொலை செய்ததை போலீஸாரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சப்பாணியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் சொன்ன இடங்களுக்கு சென்று ஒவ்வொரு உடல்களை தோண்டி போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 2012ல் திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சி அற்புதசாமி (70), 2015ல் கீழ குமரேசபுரம் விஜய் விக்டர் (27), கிருஷ்ணசமுத்திரம் தெக்கன் (75), 2016ல் கூத்தைப்பார் வடக்கு ஹரிஜனத் தெருவைச் சேர்ந்த சத்தியநாதன் (45), உப்பிலியபுரம் வடகாடு குமரேசன் (50) ஆகியோரை சப்பாணி கொலை செய்துள்ளார். அடுத்து சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் (75) கொலை செய்துள்ளார். பணம், நகைகளை கொள்ளையடிக்க சப்பாணி இந்த கொலைகளை செய்துள்ளார்" என்றனர்.

8 பேரையும் சப்பாணி கொலை செய்த ஸ்டைலே தனி என்கிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். "கோயிலுக்கு வரும் நபர்களிடம் சப்பாணி, முதலில் பேச்சுக் கொடுப்பார். அப்போது அவர்களின் வேண்டுதல்களை தெரிந்து கொள்வார். அதில் பணம் தேவைக்காக வருபவர்களிடம் காட்டில் புதையல் இருக்கிறது. பூஜை செய்தால் அதை எடுத்துவிடலாம் என்று ஆசைவார்த்தை கூறுவார். சப்பாணியின் பேச்சை நம்புபவர்கள் அந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அவ்வாறு பூஜைக்கு சென்றவர்களை கொன்று நிர்வாணமாக புதைப்பதை சப்பாணி ஒரு வேலையாக வைத்துள்ளார். அவரது பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது சைக்கோ போல தெரிகிறது. சப்பாணி சொன்ன தகவலின்படி கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். 7 பேரை கொன்ற சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் கொலை செய்துள்ளார். அவரையும் புதையல் ஆசை காட்டி கொலை செய்தாரா என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

கொலை செய்வது எப்படி?

புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று சொல்வார் சப்பாணி. அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர். மந்திரங்கள் கூறியப்பிறகு சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவில்லை. தங்கதுரை கொலையில் சிக்கியபிறகே அவரது முழு சுயரூபமும் போலீசுக்கு தெரியவந்துள்ளது. சப்பாணிக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024