Saturday, October 1, 2016

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு தரவிருந்த பொறுப்பு....அவிழ்க்கப்படாத அரசியல் ரகசியம்! 

vikatan.com


நடிகர் திலகத்தின் 89 வது பிறந்தநாள் இன்று...அவரைப்பற்றிய சுவாரஸ்யங்கள் சில....

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் எடுத்துக்கொண்டிருந்த அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் பங்குதாரரான தயாரிப்பாளரின் நண்பர் அவரைப் பார்க்க வந்திருந்தார். படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் முதற்படம். படப்பிடிப்பை கொஞ்சநேரம் பார்த்த அவர், 'இந்த குதிரைமூஞ்சிக்காரனையா கதாநாயகனா போட்டிருக்க...வாயை இப்படி பிளக்கிறானேய்யா, படம் விளங்கினாப்லதான்' என அந்த நடிகரின் காதுபடவே பேசிவிட்டுச்சென்றார். அதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிமுக நடிகர் நொந்துபோனார். கவலைப்படாதய்யா எனஅவரை தேற்றிய தயாரிப்பாளர், படப்பிடிப்பை அத்துடன் நிறுத்தி அவரை சில மாதங்களுக்கு தனது சொந்த செலவில் சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு அனுப்பிவைத்தார். எல்லா செலவுகளும் தயாரிப்பாளருடையது.

திரும்பிவந்த சிவாஜியைப்பார்த்த தயாரிப்பாளரின் நண்பர் 'யாருப்பா இது புது கதாநாயகனா என்றார்...விபரத்தைச்சொன்னதும் அந்த தம்பியா இது...'என ஆச்சர்யத்தில் உச்சிக்கே போனார் தயாரிப்பாளர். அந்தளவுக்கு பொலிவாய் மாறியிருந்தார் அந்த அறிமுகநடிகர். நண்பரின் சொன்னதற்காக தன்னை படத்திலிருந்து நீக்காமல் தொடர்ந்து நடிக்க தனக்கு அளித்த அந்த தயாரிப்பாளரை தன் இறுதிக்காலம் வரை ஆண்டுதோறும் பொங்கலன்று அவரது சொந்த ஊரான வேலுாருக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று திரும்புவதை வழக்கமாக்கிக்கொண்டார் அந்த நடிகர். 1952 ல் வெளியாகி தமிழ்சினிமாவிற்கு புதியதொரு பாதையை வகுத்த அந்த திரைப்படம் பராசக்தி...அந்த கதாநாயகன் பின்னாளில் உலகப்புகழ்பெற்ற சிவாஜிகணேசன்...இப்படி சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கமே ஒரு தன்னம்பிக்கைக்கதை...

விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பதுதான் வி.சி கணேசன்...அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜயம் என்ற நாடகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்ததால், நாடகத்தின் நுாறாவது அரங்கேற்றத்தில் பெரியார், கணேசன் இனி சிவாஜி கணேசன் என பட்டம் வழங்கினார் . அந்த நாடகத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்து கணேசனுக்கு பரிந்துரைத்தது எம்.ஜி.ஆர் என்பது இன்னொரு சிறப்பு.



தியாகராஜபாகவதர்,பியு சின்னப்பா என சொந்தக்குரலில் பாடி நடிக்கும் நடிகர்களின் காலம் முடிந்தசமயம் சிவாஜி, எம்.ஜி.ஆர் கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஜெமினி கணேசன் என அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவானார்கள். அதில் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அழுத்தமான பாத்திர வடிவமைப்பு, உருக்கமான நடிப்பு என முதல்வரிசையில் நின்றவர் சிவாஜி.
எம்.ஜி.ஆரைப்போன்றே சிவாஜியும் அண்ணா மீது அளவற்ற காதல் கொண்டவர். ஆனால் அண்ணாவின் மற்ற தம்பிகள் அவருக்கு உரிய இடம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னாளில் அவர் திருப்பதி சென்று வந்த விஷயத்தை பெரிதாக்கி மனஉளைச்சலை ஏற்படுத்தினர். நொந்துபோய் திமுகவிலிருந்து வெளியேறினார் சிவாஜி.

திருப்பதி சென்றால் திருப்பம் நேரும் என்பார்கள். சிவாஜிக்கு திருப்பதி 2 விதத்தில் திருப்புமுனையானது. அங்குதான் அவரது திருமணம் நடைபெற்றது. இறுதிவரை தன் மனைவியுடன் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சிவாஜி. ஆனால் அரசியலைப்பொறுத்தவரை அவருக்கு வேறு திருப்பம் நிகழ்ந்தது. அண்ணாவிடம் ஈர்ப்பு கொண்டு திமுகவில் இணைந்து பணியாற்றிய சிவாஜி, 50 களின் மத்தியில் திருப்பதி சென்றார். திரும்பிவந்தபோது அரசியல் களம் அதகளப்பட்டது. திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா என அவரது பட பாணியிலேயே போஸ்டர் ஒட்டி திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். நாத்திகக் கட்சியில் இருந்துகொண்டு திருப்பதி போனதால் இந்த எதிர்ப்பு. தியாகி குடும்பத்தை சேர்ந்தவரான அவரை காங்கிரஸ் அணைத்துக்கொண்டது.

திரையுலகிலும் அரசயலிலும், எதிரும் புதிருமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி விளங்கினாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அஙகு சென்று வந்த சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் பெரும் வரவேற்பை நிகழ்த்தினார் எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து அவரை மாலை மரியாதையுடன் சாரட் வண்டியில் அழைத்துவந்தார். சிவாஜி- எம்.ஜி.ஆர் இடையே தொழிற்போட்டி உச்சத்தில் இருப்பதாக பத்திரிகைகள் எழுதிவந்த நேரத்தில் இந்த நிகழ்வு அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கென ஒரு சிறப்பு மலரை வெளியிட்ட எம்.ஜி.ஆர், அதில் எந்த நடிகனுக்கும் கிடைக்காத பேறு இது என்றும், சிவாஜி ஒரு மகாநடிகன் எனவும் ஈகோ இன்றி பாராட்டித்தள்ளினார். இறுதிக்காலம் வரை ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் இன்னொருவர் பங்குகொள்வதை இருவரும் தவறாமல் கடைபிடித்தனர். சிவாஜி வீட்டுப்பிள்ளைகள் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றே அழைப்பர். அத்தனை நட்பை பேணிவந்தனர் திரையுலகில்.



படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மறுநிமிடத்திலிருந்து அந்த கதாபாத்திரதோடு ஒன்றிவிடுவார் சிவாஜி. தன் அருகில் இருப்பவர்களை கண்களால் அளவெடுப்பதுமனிதர்களை அவ்வப்போது உற்று கவனிப்பார். அவர்களுக்கு சிவாஜி ஏன் தன்னை அபபடி கவனிக்கிறார் என குழம்புவார்கள். அவரது திரைப்படம் வெளியாகும்போது அதற்கான விடை கிடைக்கும். ஆம். அவர்களின் உடல்மொழியை படத்தில அற்புதமாக வெளிப்படுத்தி பாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருப்பார். திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஆதாரமானவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

நடித்துக்கொண்டிருக்கும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்பது சிவாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. அப்படி இறப்பதே தனக்கு பெருமையளிப்பதாகும் என தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வார். படப்பிடிப்புக்கு சென்றபோது எதிர்பாராமல் மரணமடைந்த முத்துராமனுக்கு நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் முத்துராமன் நம்மையெல்லாம் விட சிறந்த நடிகன்...அதனால்தான் தொழிலுக்கு சென்ற இடத்தில் இறந்தார் என நெகிழ்ந்தார் சிவாஜி. ஆனால் சிவாஜியின் இந்த ஆசை நிறைவேறாமல் போனது.



குடும்பத்தினர் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் சிவாஜி. தன் 2 சகோதரர்கள் குடும்பங்கள் உட்பட அனைவரும் இறுதிவரை ஒன்றாகவே வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மாபெரும் நடிகன் என்றாலும் அவருக்கு கணக்கு வழக்கு தெரியாது. தன் படத்தில் தன் சம்பளம் என்னவென்று கூட கேட்டு அறிந்துகொள்ள மாட்டார். எல்லாவற்றையும் அவர் தம்பி சண்முகம் பார்த்துக்கொள்வார். தன் சகோதரர்கள் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் சிவாஜி.

சிவாஜி தீவிர வேட்டைப்பிரியர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது தனது நெருங்கிய நண்பர், வேட்டைக்காரன் புதுார் மாணிக்கத்துடன் துப்பாக்கி தோட்டா சகிதம் கம்பீரமாக காட்டுக்கு புறப்படுவது அவருக்கு பிடித்த விஷயம்.
சிவாஜியின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப்போரில் பங்கேற்ற தியாகி. ஆனால் சிவாஜிக்கு திராவிட இயக்கத்தின் மீதுதான் ஆசை உண்டானது. அண்ணாவின் தலைமை, முரண்பட்டு காமராஜர் தலைமை, காமராஜரின் மரணத்திற்கு பிறகு ஜனதா தளம் என பயணப்பட்டு தன் சேவைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் இறுதியாக தமிழக முன்னேற்ற முன்னணியை துவங்கினார். திரையுலகில் ஈடில்லா புகழ்பெற்ற அவரால் அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.



அமெரிக்கா சென்ற சிவாஜி விரும்பி பார்க்க விரும்பியது ஹாலிவுட் மார்லன் பிராண்டோவைத்தான். பார்த்ததும் அவரை பாராட்டித்தள்ளவேண்டும் என்ற கற்பனையுடன் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி, சந்திப்பின்போது சிவாஜியை மார்லன் பிராண்டோ பாராட்டித்தள்ளிவிட்டார். நெகிழ்ச்சியின் விளிம்பிற்கு போனார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் படத்திற்காக எகிப்து அதிபர் நாசர் கெய்ரோவிக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தார். அங்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் ஒருநாள் மேயராக சிவாஜிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் சாட்சியாக அவருக்கு அந்நாட்டின் சின்னம் பொறித்த சாவியை வழங்கினார் எகிப்து அரசு. இந்த கவுரவம் பெற்ற ஒரு திரைக்கலைஞர் சிவாஜி மட்டுமே.



கட்சியிலும் ஆட்சியிலும் தன் கைமீறி நடந்த பல சம்பவங்களால் மனமும் உடலும் தளர்ந்து உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆரை அவரது இறுதிக்காலத்தில் சந்தித்தார் சிவாஜி. அப்போது தம்பி உனக்கு ஒரு பொறுப்பை தரப்போகிறேன். நாளை வா அதுபற்றி பேசலாம் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சிலவேலைகளால் சிவாஜியால் போகமுடியவில்லை. சில நாட்களில் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு என்ன பொறுப்பை தர எண்ணியிருந்திருப்பார் என்ற ரகசியம் அந்த இரு திலகங்களுக்குள் முடிந்துபோனது.

- எஸ்.கிருபாகரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024