Monday, May 1, 2017

பல்கலைகள், கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப தடை

பதிவு செய்த நாள் 01 மே
2017
02:11

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், புதியவர்களை நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அண்ணாமலை பல்கலையில், அதிக நஷ்டம் ஏற்பட்டதால், அதன் நிர்வாகம் தனியாரிடமிருந்து, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்திற்காக, மாதம், 50 கோடி ரூபாய் வரை அரசின் நிதி செலவிடப்படுகிறது.இந்த, பல்கலையில், 5,000க்கும் மேற்பட்டோர், பணியின்றி, சம்பளம் வாங்குவதாக, உயர் கல்வித்துறை கண்டறிந்துள்ளது. இவர்களில், முதலில், 369 பேர், அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

அடுத்ததாக, 547 பேராசிரியர்களும், 1,500 ஊழியர்களும் மாற்றப்பட உள்ளனர். மீதமுள்ள, 3,000 பேரையும், மாற்ற பட்டியல் தயாராகி வருகிறது. இவர்களை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் நியமிக்க, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. 'காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிட்டிருந்தால், அதை திரும்பப்பெற வேண்டும். மீறி, புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டால், அந்த பல்கலைக்கான நிதி மற்றும் மானிய தொகை கிடைக்காது' என, பல்கலை துணை வேந்தர்களுக்கு, உயர் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024