Wednesday, June 28, 2017

முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6–ந் தேதி அரசாணை வெளியிட்டது.

ஜூன் 28, 2017, 05:15 AM

புதுடெல்லி,

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை 4–ந் தேதி நடைபெறுகிறது.முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6–ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9–ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது.

இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும், அரசாணைகளின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் மறுநாள் வெளியிட்டது.இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ‌ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த 16–ந் தேதி உத்தரவிட்டனர்.

மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் ஏற்கனவே மருத்துவ படிப்பில் முதுகலை பட்டப்படிப்புக்கு சேர்க்கை பெற்ற 973 மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவ மேல்படிப்புக்கான சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்த இடங்கள் அனைத்தும் நிரப்ப முடியாமல் காலியாக இருக்கும்.

அது இந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை உருவாக்கும். எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.சப்ரே, சஞ்ஜய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆஜராகி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 4–ந் தேதியன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025