பாடம் நடத்துவதில் புதிய புதிய உத்திகள்: அசத்துகிறது சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி - நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்யும் ஆசிரியர்கள்
எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின் வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும் ஆசிரியர்கள்; மாணவர்கள்.
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றால் இத்தனை காட்சிகளையும் காணலாம். தமிழ் தவிர ஆங்கில மீடிய வகுப்புகளும் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லூரில், மிகப் பெரும் தனியார் பள்ளிகள் ஏராளம். எனினும் எத்தனைப் பள்ளிகள் இருந்தாலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 596 மாணவர்கள்; 17 ஆசிரியர்கள்; 3 சிறப்பாசிரியர்கள் உள்ளனர். வேறு பள்ளிகளிலிருந்து வரும் புதிய மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டேயிருக்கிறது. விரை வில் மாணவர்களின் எண்ணிக்கை 700-ஐ எட்டக் கூடும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பாடம் போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சோழிங்கநல்லூரில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
“எப்ப பார்த்தாலும் என் பையன் செல்போனி லேயே விளையாடிட்டு இருக்கான்…” எல்லா ஊரிலும் கேட்கும் பெற்றோர்களின் புலம்பல் இது.
“பரவாயில்லை. பசங்கள விளையாட விடுங்க”. இப்படிச் சொல்கிறார்கள் சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
“செல்போன் என்பது இன்று பெரியவர் கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோராலும் சகஜமாகப் பயன்படுத்தப்படு கிறது. சிறுவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதை தடுக்க முடியாது. ஆனால் பயனுள்ள வழிகளில் அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் உறுதிப்படுத்த முடியும்” என்கிறார் இந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சு.பத்மாவதி.
பாடப்புத்தகங்களில் அன்றாடம் மாணவர்கள் படிக்கும் அத்தனை பாடங்களையும் விளையாட்டுகளாக விளையாட முடியும். இதற்கான ஆயிரக்கணக்கான செயலிகள் (App) கிடைக்கின்றன. அத்தகைய செயலிகளை நாங்கள் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளில் மாணவர்கள் உற்சாகமாக பாடம் கற்க இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் மெமரி கார்டு கொண்டு வந்தால், இந்த செயலிகளை பதிவு செய்து கொடுக்கிறோம். தங்கள் வீட்டில் உள்ள செல்போனில் அந்த கார்டை செருகி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். வகுப்பில் நடத்தும் பாடங்களை மீண்டும் வீடுகளில் கேட்க வசதியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் ஐ பேட் வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்கிறார் பத்மாவதி.
அனிமேஷன் படங்கள்
அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஏராளமான அனி மேஷன் படங்களை ஆசிரியர் சு.சக்திவேல் முருகன் உருவாக்கியுள்ளார். இந்த அனி மேஷன் படங்களை தனது பள்ளியில் மட்டும் இவர் பயன்படுத்தவில்லை. மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகிறார். இவர்கள் இருவரும் உதாரணங்கள் மட்டுமே. இவர்களைப் போலவே இந்தப் பள்ளியின் அத்தனை ஆசிரியர்களும் பலவித திறன்களைக் கொண்டிருக்கிறார்கள்.
காவனூர் புதுச்சேரியில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடும் சோழிங்கநல்லூர் பள்ளி மாணவர்கள்.
பிரிட்டிஷ் கவுன்சில் விருது
இந்தப் பள்ளிக்கு இன்னும் பல பெருமிதங்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி. சார்பில் இந்தப் பள்ளியின் 4 மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். கற்றல், கற்பித் தல் உத்திகள் பற்றி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அளித்த பயிலரங்கில் அவர்கள் பங்கேற்றனர். “பள் ளிக்கு திரும்பிய அந்த மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக வகுப் பெடுத்தனர்” என ஆசிரியர் சரஸ்வதி கூறுகிறார்.
சர்வதேச அளவில் சிறந்த பள்ளிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் விருதை 2013-ம் ஆண்டு இந்த அரசுப் பள்ளியும் பெற்றுள்ளது. தரமான கல்வி, மிகச் சிறந்த ஆசிரியர்கள், அறிவார்ந்த மாணவர்களைக் கண்டு அருகேயுள்ள பல தொழில் நிறுவனங்கள் இந்தப் பள்ளிக்கு ஆர்வமாக பல உதவிகளை செய்து வருகின்றன. ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் சார்பில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்நிறுவனத்தின் ஊதியத்தில் ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு நிறு வனம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசி ரியரை நியமித்துள்ளது. மற்றொரு நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப் பில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கற்பித்தல் உபகரணங்களை வேறு சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அனை வருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
எதிர்கால இலக்கு
“இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பள்ளியில் பணியாற்றுவதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்” என்கிறார் தலைமையாசிரியர் அ.கா.ஹமிதா பானு. அவர் மேலும் கூறும் போது, “இந்தப் பள்ளியை மேலும் மேம் படுத்த எங்களுக்கு இன்னும் பல கனவு கள் உள்ளன. பள்ளிக்கென ஒரு ஆடிட் டோரியம், நூலகத்துக்கென தனிக் கட்டிடம், ஆடியோ, விசுவல் வசதிகள் கொண்ட கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை உருவாக்க வேண்டும். இன் னொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தேவைப்படுகிறது. இந்த வசதிகளை உருவாக்க நன்கொடையாளர்களின் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றையும்விட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்துவதே எங்கள் பிரதான இலக்கு” என்றார்.
இவர்களது இலக்கு பெரியதுதான். எனினும் இந்த இலக்கை விரைவிலேயே இவர்களால் எட்டி விட முடியும். அதற்கான எல்லா தகுதிகளும் இந்தப் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளன.
தங்கள் பள்ளியை எப்படியெல்லாமோ மேம்படுத்த வேண்டும் என்ற கனவுகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் சுமந்து திரிகிறார்கள். ஆனால் அந்த கனவுப் பள்ளியை எவ்வாறு உருவாக்குவது என்ற வழிமுறையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இன்னொரு பக்கம், ‘அரசுப் பள்ளியில் இவ்வளவுதான் முடியும்; இதுக்கு மேலே எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லும் ஆசிரியர்களும் பலர் உள்ளனர். இத்தகைய ஆசிரியர்கள் அனைவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒருமுறையேனும் அவசியம் சென்று வர வேண்டும்.
No comments:
Post a Comment