கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்
பதிவு செய்த நாள்18ஆக
2017
04:52
சென்னை: 'வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இரு நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் கூறியுள்ளது.
கனமழை:
இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக் கடலில், சென்னை - நெல்லுார் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இன்று மாறும் என, கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மட்டும், சில இடங்களில் மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.
இரு நாட்களுக்கு..
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.
6 ஆண்டுகளில் அதிக மழை:
கடந்த ஜூன் 1 முதல் ஆக., 17 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையானது 210 மி.மீ., என பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 33 சதவீதம் அதிகம். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
No comments:
Post a Comment