Wednesday, October 4, 2017



15 நாள், பரோல், கேட்ட, சசிகலா, விண்ணப்பம்,நிராகரிப்பு!

கவலைக்கிடமாக உள்ள கணவர் நடராஜனை பார்க்க, 15 நாள் பரோல் கேட்ட சசிகலாவின் விண்ணப்பம்,நிராகரிக்கப்பட்டது.'நடராஜன் உடல்நிலை சரியில்லை என்பதற்கு,தகுந்த ஆதாரமில்லை' என, பரோல் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக சிறைத்துறை, புதிய மனு தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு உள்ளது. சசிகலா வருகையை பயன்படுத்தி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தர நினைத்த தினகரன், 'அப்செட்' ஆகியுள்ளார்.



இதற்கிடையில், சசிகலாவுக்கு, 15 நாட்கள் பரோல் அளிப்பது தொடர்பாக, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, 'தடையின்மை சான்று' கோரி கடிதம் அனுப்பியுள்ளது; அது கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன் அக்கா மகன் தினகரனை துருப்பு சீட்டாக பயன்படுத்தி, முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில்,

வெற்றி கிடைத்தால் தான், பரோலில் தமிழகம் வரப் போவதாக, அவர் சபதம் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

பிடிவாதம்:

அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில், அவரது அண்ணன் மகன், மகாதேவன் மரணமடைந்த போது, வர மறுத்து விட்டார். சசிகலா வருகையை, உறவினர்கள் எதிர்பார்த்தனர்; ஆனால், பிடிவாதமாக இருந்து விட்டார்.

தற்போது, அவரது கணவர் நடராஜன், 74, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்து, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னையில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம்,இருமுறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 234 நாட்கள் சிறைவாசத்தை முடித்துள்ள சசிகலா, கணவரை பார்க்க, 15 நாட்கள் பரோல் கோரி, பெங்களூரு மத்திய சிறையில் விண்ணப்பித்தார்.

பரோலில் செல்ல கைதி விண்ணப்பித்தால், அவர் மீது, கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதா; அவரை வெளியில் செல்ல அனுமதி அளித்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா; சதிச் செயலில் ஈடுபடுவாரா; தப்பி ஓடி விடுவாரா; அதற்கு பின்னணியில் இருப்போர் யார் என்பது குறித்தெல்லாம்,

சிறைத்துறை நிர்வாகம் விசாரணையில் இறங்கும்.மேலும், பரோல் அளிக்கலாமா என்பது குறித்து, கைதி சார்ந்துள்ள மாநில அரசிடமும், காவல் துறையிடமும், 'தடையின்மை சான்று' கேட்கப்படும்.

அதன்படி, தற்போது தடையின்மை சான்று கோரி, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. அரசும், போலீஸ் கமிஷனரும் ஆட்சேபனை தெரிவித்தால், சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, கூறப்பட்டது.

ஆவணம் இல்லை

இதற்கிடையில், சசிகலா வின் பரோல் விண்ணப்பத்தை, கர்நாடக சிறைதுறை, நேற்று இரவு நிராகரித்துள்ளது. 15 நாட்கள் பரோல் வழங்கக் கோரி,பெங்களூரு,பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர், சோமசேகரிடம், சசிகலா நேற்று மனு தாக்கல் செய்தார்.இது தொடர்பாக,சட்ட வல்லுனர் களுடன், சோமசேகர் ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் கூறுகையில், ''நடராஜனின் உடல் நிலை சரியில்லை என்பது உண்மை என, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை உள்ள வட்டாரத்தை சேர்ந்த, 'கெஜடட்' அதிகாரி
உறுதிபடுத்த வேண்டும்.அதற்கான ஆவணத்தை, சசிகலா தாக்கல் செய்யாததால், பரோல் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. அந்த ஆவணத்தை இணைத்து வழங்கினால், பரோல் கொடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

இதையடுத்து, சசிகலா தரப்பில், சிறைத்துறை கேட்ட ஆவணங்களுடன், புதிய மனு தாக்கல் செய்ய, அவரின் வக்கீல்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால், சசிகலா வருகை தாமதம் ஆவதால்,தினகரன் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அவரது வருகையை பயன்படுத்தி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தர போட்ட திட்டம் தோல்வி அடைந்து விடுமோ என்ற கலக்கத்தில், அவரும்,ஆதரவாளர்களும் உள்ளனர். 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024