Friday, October 6, 2017

மாவட்ட செய்திகள்
சேலத்தில் கனமழை: குமரகிரி ஏரி நிரம்பி 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது




சேலத்தில் பெய்த கனமழையால் குமரகிரி ஏரி நிரம்பி 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அக்டோபர் 06, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரில் நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அப்போது காற்று பலமாக வீசியதால் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் நின்ற ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அஸ்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் முறிந்து சாலையில் விழுந்த தகவலை அறிந்த தீயணைப்பு மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, அம்மாபேட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் குமரகிரி ஏரி நிரம்பியது. இதனால் ஏரி தண்ணீர் அங்குள்ள மதகுகள் வழியாக வெளியேறி பச்சப்பட்டி பகுதியில் புகுந்தது. அங்குள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது.

இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் அவதிப்பட்டனர். பின்னர் அவர்கள், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை குடம் மற்றும் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். மின்சாரம் தடைபட்டதால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சீக்கிரம் புறப்பட்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

கிச்சிபாளையம், களரம்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அழகாபுரம், பெரமனூர், மெய்யனூர், மணக்காடு, ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்திரம் பகுதியில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் தேங்கி நின்றது. வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர். குறிப்பாக சங்ககிரி, வாழப்பாடி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர் உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரையிலும் நீடித்தது. இதனால் வழக்கத்தை விட அங்கு குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் பல மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வீரபாண்டி அருகே உள்ள வாழகுட்டப்பட்டியில் மழை பெய்தபோது அங்குள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி அருகே நீர் இடி விழுந்தது. இதனால் அந்த பகுதியில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் சீலநாயக்கன்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் இவருடைய வீட்டின் சுவர் முழுவதும் நனைந்து, நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சுவர் அருகில் தான் நாகராஜூம், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன்கள் முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். ஆனால் சற்று தள்ளி சுவர் இடிந்து விழுந்ததால் இவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

சங்ககிரி-105.3, வாழப்பாடி-102.3, தம்மம்பட்டி-90.6, கெங்கவல்லி-90.4, ஓமலூர்-89, ஏற்காடு-87.4, எடப்பாடி-78.2, சேலம்-60, காடையாம்பட்டி-58.4, பெத்தநாயக்கன்பாளையம்-58, வீரகனூர்-52, ஆத்தூர்-46.6, மேட்டூர்-31.2, ஆனைமடுவு-30, கரியகோவில்-5.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024